சென்னை: சென்னை பெருநகர காவலில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 554 வாகனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு 3 தவணைகளாக பொது ஏலத்திற்கு விடப்பட்டது. இதில் மொத்தம் 527 வாகனங்கள் ரூ.1,40,93,941 தொகைக்கு பொது ஏலத்தில் விற்கப்பட்டது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்தி. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, அரசு மோட்டார் வாகன அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் கடந்த 2022-ம் ஆண்டு 3 தவணைகளாக பொது ஏலத்திற்கு விடப்பட்டு, 527 வாகனங்கள் விற்கப்பட்டது.
அதன்பேரில், 10.02.2022 அன்று 1 இருசக்கர வாகனம், 104 இலகுரக வாகனங்கள் மற்றும் 9 கனரக வாகனங்கள் என 114 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்பட்டு, ரூ.37,51,441 தொகைக்கு விற்கப்பட்டது.
தொடர்ந்து, 30.06.2022 அன்று 80 இருசக்கர வாகனங்கள் மற்றும் 74 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்பட்டு, 141 வாகனங்கள் ரூ.50,32,500 தொகைக்கும், 29.12.2022 அன்று 220 இருசக்கர வாகனங்கள் மற்றும் 66 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 286 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்பட்டு, 272 வாகனங்கள் ரூ.53,10,000 தொகைக்கும் விற்கப்பட்டது.
இவ்வாறு சென்னை பெருநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட மொத்தம் 301 இருசக்கர வாகனங்கள், 254 இலகுரக வாகனங்கள் மற்றும் 9 கனரக வாகனங்கள் என மொத்தம் 554 வாகனங்கள் கடந்த 2022ம் ஆண்டு பொது ஏலத்திற்கு விடப்பட்டு, இதில் 527 வாகனங்கள் மொத்த தொகை ரூ.1,40,93,941 தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.