பாட்னா: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.
வரும் 30-ம் தேதி நாகாலாந்தில் நடைபெறும் எங்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக அதே நாளில் நடைபெற உள்ள ஒற்றுமை நடை பயண நிறைவு நிகழ்ச்சியில் எங்களால் பங்கேற்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் இந்த முடிவு காங்கிரஸுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.