சென்னை: சென்னை எழும்பூர், காட்பாடி, புதுச்சேரி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம், எர்ணாகுளம் டவுன் ஆகிய 9 ரயில் நிலையங்கள், விமான நிலையங்களின் தரத்துக்கு இணையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றிவைத்து, பொது மேலாளர் ஆர்.என்.சிங் பேசியதாவது:
தெற்கு ரயில்வே நடப்பு நிதியாண்டில், அனைத்துத் துறைகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதேபோல, நடப்பு நிதியாண்டில் மொத்த வருவாய் வளர்ச்சி அதிகரித்துள்ளது. கடந்த 2021-22-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, மொத்த வருவாய் 47.46 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல, சரக்குப் போக்குவரத்தும் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 28 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தெற்கு ரயில்வே முழுவதுமே பயணிகள் மற்றும் சரக்கு ரயில் வேகம் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான உட்கட்டமைப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரட்டைபாதை மற்றும் அகலப் பாதையில் 116.32 கி.மீ. தொலைவுக்கு பணிகளை முடித்துள்ளோம். இது, 2021-22-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 250 சதவீதம் அதிகமாகும். மேலும், நடப்பு நிதியாண்டில் 743 கி.மீ. ரயில் பாதைகளில் செல்லும் ரயில்களில் வேகத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் 100 சதவீதம் மின்மயமாக்குதல் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் 188 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பர் வரை 4,393 கி.மீ. தொலைவு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அதாவது 87 சதவீதம் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், உரிய ஆவணமின்றி ரயில்களில் கொண்டு வரப்பட்ட ரூ.33 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் ஹவாலா பணம் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரயில் நிலையங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டுமென்ற பிரதமர் மோடியின் லட்சியத்தின் அடிப்படையில், தெற்கு ரயில்வேயில் சென்னை எழும்பூர், காட்பாடி, புதுச்சேரி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, எர்ணாகுளம் சந்திப்பு, கொல்லம் மற்றும் எர்ணாகுளம் டவுன் ஆகிய 9 ரயில் நிலையங்கள், விமான நிலையங்களின் தரத்துக்கு இணையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த டிசம்பர் வரை 4,393 கிமீ தொலைவு ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் 188 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெறுகின்றன.