தென்காசியில் குஜராத்தி பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை தாக்கி, பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினித்தும், அதே பகுதியில் மர அறுவை ஆலை நடத்தி வரும் நவீன் படேல் என்பவரது மகள் குரூத்திகாவும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 20 தினங்களுக்கு முன்பு குரூத்திகாவை வீட்டை விட்டு அழைத்துச்சென்ற வினித் கோவிலில் வைத்து தனது பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் தந்தை நவீன் படேல், தனது மகள் கடத்தப்பட்டதாக, குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் காதல் ஜோடி இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் திருமண வயதை அடைந்தவர்கள் என்பதால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கள் திருமணத்தை முறைப்படி பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக 25ஆம் தேதி கொட்டாக்குளத்திலிருந்து குத்துக்கல்வலசைக்கு சென்ற புதுமண தம்பதியர் புத்தாடைகள் வாங்குவதற்காக அங்குள்ள ஜவுளி கடைக்கு புறப்பட்டனர்.
குத்துக்கல்வலசையில் இவர்களை நோட்டமிட்ட நவீன் படேல் குடும்பத்தினர் வினித்திடமிருந்து வலுக்கட்டாயமாக தங்கள் பெண் குரூத்திகாவை தூக்கிச் செல்ல விரட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய காதல் தம்பதியரை கும்பலாக சென்று தாக்கியதால பரபரப்பு ஏற்பட்டது
அந்த பகுதியில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும் கேட்காமல் இது தங்கள் குடும்ப கவுரவம் சார்ந்தது என்று பெண்ணை கால் மற்றும் கையை பிடித்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.
கடுமையாக தாக்கப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் வினீத் விரக்தியோடு புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இது குறித்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடத்தப்பட்ட பெண் குறித்து குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.