முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், கோவிலில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்தும் வகையில், மதுரையிலிருந்து பழனி வரையிலும் மற்றும் பழனி வழியாக திண்டுக்கல்லிலிருந்து கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த ரெயில்கள் ஐந்து நாட்களுக்கு இயக்கப்படுகிறது.
அதன்படி மதுரையிலிருந்து பழனி இடையே இயக்கப்படும் ரெயில் மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கு மதியம் 12.30 மணிக்கு வந்தடையும்.
பிறகு, இந்த ரெயில் பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை ஐந்து மணிக்கு மதுரை சென்றடையும். இதேபோன்று கோவையிலிருந்து திண்டுக்கலுக்கு இயக்கப்படும் ரெயில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்தடையும். பிறகு பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும்.