தமிழகம் முழுவதும் உள்ள 2.67 கோடி நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 2022 நவ.15ம் தேதி தொடங்கப்பட்டது. பெரும்பாலானோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்து டிச.31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது.
தமிழக முழுவதும் உள்ள 2811 மின்வாரிய அலுவலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மக்களின் கோரிக்கையை ஏற்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜன.31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று நிலவரப்படி தமிழக முழுவதும் 2.20 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். ஆதார் எண் இணைக்காத நுகர்வோர்களை நேரில் சென்று மின்வாரிய ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மின்வாரியம் வழங்கிய கால அவகாசம் முடிய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஜன.31ம் தேதிக்குள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர்வோர்கள் பிப்.1ம் தேதி முதல் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.