“கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கம் வைத்துக் கொண்டிருந்த என்னை ஒழுக்கமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றியவர் என்னுடையை மனைவி லதா தான்” எனக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் “சாருகேசி” நாடகத்தை பார்வையிட்டு, விரைவில் அந்த நாடகம் திரைப்படமாக்கப்பட உள்ள அறிவிப்பையும் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். பின்னர் சாருகேசி நாடகத்தில் நடித்த கதாபாத்திரங்களை கௌரவித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மேடை பேசியபோது, “47 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் ‘ரகசியம் பரம ரகசியம்’ நாடகம் பார்க்க சென்ற நான் அரை மணி நேரம் காத்திருந்தும் நாடகத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஆனால் காலம் ஒருவரை எங்கிருந்து எப்போது எங்கு கொண்டு போகும் என தெரியாது. அதை மகா காலம் என்று சொல்வார்கள். அவ்வாறு இருந்த நான், இன்று ஐம்பதாவது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் எல்லாம், இது அந்த காலத்தின் விளையாட்டுதான். சாருகேசி நாடகத்தை படமாக எடுக்கும் போது நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
சிகரெட் – மது – மாமிசம் இந்த மூன்றும் Deadly Combo. இதை எடுத்துக்கொண்டவர்கள் யாரும், 60 வயதுவரை வாழ்வதில்லை. அப்படியே வாழ்ந்தாலும், படுக்கையிலேயேதான் வாழ்வார்கள். எனக்கே அப்படி சிலரை தெரியும். பெயரை சொல்ல விரும்பவில்லை. நானும் ஒரு காலத்தில் இந்த மூன்றையும் எடுத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளேன். என்னை நல்ல மனிதனாக மாற்றியதே, என் மனைவி தான்.
திருமணத்துக்கு முன்னும் பின்னுமான என் படங்களை பார்த்தாலே, அந்த வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். அன்பாலேயே என்னை திருத்தியவர் என் மனைவி லதா. அவருக்கு நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த இடத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. என் மனைவி லதாவை எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஒய்ஜிஎம் தான்.
இந்த நாடகக்குழு, 50 – 70 வருடங்கள் மட்டுமல்ல. அதைக்கடந்தும், நூறு ஆண்டுகளுக்கு நடத்தப்பட வேண்டும். ஒய்.ஜி.எம்-ன் வாரிசு மதுவந்தி அதை செய்வார் என நம்புகிறேன்” என்றார்.