சென்னை: சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் காந்தியடிகள், அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் விருதுஉள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வீரதீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கமும், ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நடந்த குடியரசு தின விழாவில் அண்ணா பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அரசு ஊழியர் பிரிவில் சென்னைதலைமைக் காவலர் பெ.சரவணன், வேலூர் ஆண் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசு, பொதுமக்கள்பிரிவில் தூத்துக்குடி ஜெ.அந்தோணிசாமி, கன்னியாகுமரி நா.கிருஷ்ணன், தஞ்சாவூர் அ.செல்வம் ஆகியோருக்கு பதக்கத்தையும், பரிசுத் தொகையையும் முதல்வர் வழங்கினார்.
அதேபோல, மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரிலான கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ. இனயத்துல்லாவுக்கு முதல்வர் வழங்கினார். திருத்திய நெல்சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிகளுக்கான வேளாண்மைத் துறையின் சிறப்பு விருது மற்றும் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த க.வசந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க பணியாற்றிய காவலர்களுக்கு உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. சென்னை மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமையக ஆய்வாளர் த.எ.பிரியதர்ஷினி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் கா.ஜெயமோகன், சேலம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் ச.சகாதேவன், விழுப்புரம் மத்திய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் பா.இனாயத் பாஷா, செங்கல்பட்டு பாலூர் காவல் நிலைய மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் சு.சிவனேசன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதல்வர் வழங்கினார்.
சிறந்த காவல் நிலையங்களுக்கான முதல்வர் விருதுக்கான முதல்பரிசு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கும், 2-ம் பரிசு திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலையத்துக்கும், மூன்றாம் பரிசு திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்துக்கும் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களிடம் முதல்வர் வழங்கினார்.