தூத்துக்குடி சி.எஸ்.ஐ தேவாலய வளாகத்தில் இரு தரப்பினருக்கு இடையே உருவான பிரச்சனையில், ஒரு தரப்புக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்ற பாதிரியார் மீது பாலியல் புகார் கூறி சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் லே செயலாளர் கிப்சன் தரப்பினர் ஒரு பிரிவாகவும் எஸ் டி கே ராஜன் பிரிவினர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதில் கிப்சன் தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்குள்ளான பாதிரியார் செல்வின் துரை என்பவர் பரிபேதுரு சி.எஸ்.ஐ தேவாலயத்தில் ரகசிய கூட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களான எஸ் டி கே ராஜன், தேவராஜ் , கோயில்பிச்சை, ரூபன் வேதா சிங் ஆகிய நான்கு பேரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானதால் அவர்களது ஆதரவாளர்கள் பாதிரியாரை மறித்து கூட்டம் நடத்தவிடாமல் விரட்டினர்.
எஸ் டி கே ராஜன் தரப்பினர் பாதிரியார் செல்வின் துரை மீது பாலியல் புகார்களை தெரிவித்தனர், சண்முகபுரத்தில் அந்த வீட்டுக்குள்ள படுத்து கிடந்தல்ல என்று பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்த இரா ஹென்றி உரக்க சத்தமிட்டபடி பாதிரியாரை விரட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மேலும் இருசக்கர வாகனத்தில் வெளியே செல்ல முயன்ற பாதிரியார் செல்வின் துரையை வெளியே செல்ல விடாமல் சாவியை பறித்து வைத்துக் கொண்டு பைக்கை இழுத்ததால் மிரண்டு போய் விட்டார்.
எஸ் டி கே ராஜன் அணியினர் சிறை பிடித்ததால் வெளியே செல்ல இயலாமல் அவரது அறைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இரு தரப்பினர்களிடையே காவல்துறை முன்னிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது.
காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து திட்டமிடப்பட்ட ரகசிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆலய வளாகத்திலேயே இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.