செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவராக அன்பரசன் மற்றும் துணை தலைவராக கன்னியப்பன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இதில், அப்பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மத்தியில் கல்வியின் அவசியம் குறித்து ஊக்கப்படுத்தும் வகையில், அரையாண்டு தேர்வில் பள்ளியளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளை ஒருநாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவராக பதவியேற்கலாம் என ஊராட்சி மன்ற தலைவர் கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தினவிழாவில் அறிவித்தார்.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டின் அரையாண்டு தேர்வில் முதல் இடம் பிடித்த பூபாலான் என்பவரின் மகள் நேத்ரா மற்றும் இரண்டாம் பிடித்த ராமச்சந்திரன் என்பவரின் மகள் ஸ்ரீபிரியதர்ஷினி ஆகியோரை, குடியரசு தினமான இன்று ஒருநாள் ஊராட்சி மன்ற தலைவர்களாக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தலைவர்களாக பதவியேற்றனர். பின்னர், தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர்களாக பங்கேற்ற மாணவிகள், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து, ரூ40 லட்சம் மதிப்பிலான ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினர்.
மேலும்,பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களாக பங்கேற்ற மாணவிகள், அருங்குன்றம் ஊராட்சியின் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றனர். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். பள்ளி மாணவிகள் இருவர், குடியரசு தினநாளில் ஊராட்சி மன்ற தலைவர்களா பதவியேற்றதால் அப்பகுதி மாணவர்களிடையே ஆச்சர்யத்தையும் மற்றும் பெற்றோர்கள், மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.