மக்களவை தேர்தல் இன்று நடந்தால்… ஆட்சியை கைப்பற்றுமா பாஜக – குட் நியூஸ் யாருக்கு?

2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியடைந்து, இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைத்தது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து இரண்டு இலக்க தொகுதிகளிலேயே கைப்பற்றியது. கடந்த முறை திமுக உள்ளிட்ட சில மாநில எதிர்கட்சிகள் தங்கள் மாநிலத்தின் சில தொகுதிகளை கைப்பற்றினர். 

ஆனால், இந்த நிலை அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பிரதிபலிக்குமா என்று தற்போது கேட்டால் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்கும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கு பதிலாக தற்போதைய சூழ்நிலையில், மக்களவை தேர்தல் வந்தால் அதில் யார் வெற்றி பெற்று ஆட்சியமைப்பார்கள் என்ற கருத்துக்கணிப்பு தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

மாநில அளவில் எதிர்க்கட்சியாக உள்ள தலைவர் அடுத்தகட்டமாக தேசிய அரசியல் நோக்கி தங்கள் பார்வையை திருப்பி உள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அந்த பட்டியலில் முதன்மையாக உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி 2024 தேர்தலை குறிவைத்து நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண் வருகிறார். இவை அனைத்தும் அந்த கருத்துக்கணிப்பில் எவ்வாறு பிரதிபலித்துள்ளன என்பதை இதில் காணலாம். 

மக்கள் மனநிலை என்ன?

India Today-C-Voter இணைந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் சாரமே, இன்று மக்களவை தேர்தல் நடைபெற்றால் அதில் யார் பிரதமராக தேர்வுசெய்யப்படுவார்கள் என்பதுதான். இந்த கருத்துக்கணிப்பில், மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜக கூட்டணி, மொத்தமுள்ள 543 இடங்களில் 298 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி 153 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது. மாநில கட்சிகள் மற்றும் சுயேட்சை கட்சிகள் சேர்ந்து 92 இடங்களை வெல்லும் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், பாஜக கூட்டணி 43 சதவீதம் வாக்கையும், காங்கிரஸ் 29 சதவீதத்தையும், பிற கட்சிகள் சேர்ந்து 28 சதவீதத்தையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவுக்கு மட்டும் 284 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 68 இடங்களும் மற்றவர்களுக்கு 191 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி வாரியான வாக்கு சதவீதத்தை பார்த்தால், பாஜக 39 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 22 சதவீத வாக்குகளையும் மற்றவர்கள் 39 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களிலும், அதன் கூட்டணி மொத்தம் 353 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸின் 52 இடங்கள் உட்பட 91 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.