அதிமுக கூட்டணியில் ஒரே குழப்பம்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு!

அதிமுக கூட்டணியில் ஒற்றுமையில்லாமல் குழப்பமாக உள்ளார்கள். அண்ணாமலை நேரத்திற்கு ஒரு பேச்சு பேசுகிறார் என நெல்லையில் மாநகர திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

நெல்லை மாநகர திமுக அலுவலகம் நெல்லை டவுன் மவுண்ட் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் நெல்லை மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சருமான ராஜ கண்ணப்பன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நெல்லை மாநகர பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், உள்ளிட்ட பணிகளுக்காக ரூபாய் 18 கோடி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்தப் பணிகள் விரைவில் நெல்லை மாநகரப் பகுதிகளில் தொடங்கும். தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்காக திமுக பாடுபடும் என தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை அவர்கள் குழப்பமான மனநிலையில் உள்ளார்கள். அந்த கூட்டணியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் திமுக கூட்டணி வேட்பாளர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நாடாளுமன்றத் தேர்தல் ஒரு வருடத்தில் வரும். அதனை சந்திக்க திமுக தயாராக உள்ளது. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.

மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு திமுக தலைவர் ஒருபோதும் தயங்கியது கிடையாது. இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி என்று பாராட்டப்பட்டுள்ள ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. அனைத்து மக்களுக்கும் சமமான நல்லாட்சி என அனைவரும் திமுகவை பாராட்டி வருகிறார்கள். திமுக தேர்தல் பயணத்தில் இடைத்தேர்தலை சந்திப்பதாக அண்ணாமலை கூறியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரத்திற்கு ஒரு பேச்சு பேசுபவர் என அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.