பத்தனம்திட்டா: கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல,மகர விளக்கு பூஜையின்போது ரூ.351 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பலமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
ஆனால் 2020, 21-ம் ஆண்டுகளில் கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் வருகை வெகுவாகக் குறைந்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கூடுதல் நேரம் கோயில் நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை போன்றவற்றின் மூலம் சபரிமலை கோயிலுக்கு இந்த ஆண்டு வருவாய் அதிகரித்துள்ளது. அதிலும் சபரிமலை ஐயப்பன் கோயில் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் ரூ.351 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ஆனந்தகோபன் கூறியதாவது: சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதன்மூலம் இந்த ஆண்டு ரூ.351 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது. 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை கடந்த டிசம்பர் 27-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மகர விளக்கு கால பூஜைக்காக கோயில் நடை டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.