காங்கிரஸ் எம்.பி முதல் பாஜக பிரசாரம் வரை… மறைந்த பழம்பெரும் நடிகை ஜமுனாவின் அரசியல் பாதை

தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ் – கவுசல்யா தேவி ஆகியோருக்கு மகளாக 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பிறந்தவர் ஜமுனா. சிறுவயது முதலே பள்ளியில் மேடை நாடகங்களில் ஆர்வம் காட்டி நடித்து வந்த அவருக்கு, அவரது தாயார் உறுதுணையாக இருந்ததுடன், பாட்டு மற்றும் ஹார்மோனியம் உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொள்ளவும் சிறப்பு பயிற்சி அளித்தார். தனது 16 வயதில் டாக்டர் கரிக்காபட்டி ராஜாராவ்வின் ‘Puttilu’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜமுனா.

ஆரம்ப காலங்களில் பெரிதாக நடிப்புத் துறையில் அறியப்படவில்லையென்றாலும் பின்னாளில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜமுனா, தமிழில் ‘மிஸ்ஸியம்மா’, ‘தெனாலிராமன்’, ‘தங்கமலை ரகசியம்’ போன்ற பலப் படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக ‘அன்புள்ள மான் விழியே’, ‘அமுதை பொழியும் நிலவே’, ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா’ போன்ற பாடல்களால் தமிழ் ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த அவர், தமிழில் கடைசியாக கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் அவரது தாயாராக நடித்திருந்தார். மொத்தம் 198 படங்களில் இவர் நடித்துள்ளார்.

image

நடிப்பிற்காக பல விருதுகளை வென்ற இவர், பின்னர் 1980-களில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1989-ம் ஆண்டு ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் எம்.பி. ஆக இருந்தவர், 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தப் பின்னர், அரசியலில் இருந்து விலகினார். எனினும் 1990-களின் இறுதியில் மறைந்த பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சினிமா, அரசியல் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் நடிகை ஜமுனா காலமானார். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்கோளாறால் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் இறப்புக்கு தெலுங்கு திரையுலகம், ஆந்திரப்பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜமுனாவின் கணவர் பேராசிரியர் ஜூலூரி ரமணா ராவ், கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதிக்கு வம்சி ஜூலூரி என்ற மகனும், ஸ்ரவந்தி என்ற மகளும் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.