பாட்னா: தனது சகாவும், நாடாளுமன்ற குழுவின் தலைவருமான உபேந்திர குஷ்வாஹாவை ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறுமாறு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். உபேந்திர குஷ்வாஹா பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள உபேந்திர குஷ்வாஹா, கட்சியில் எனக்கான பங்கைப் பெறாமல் வெளியேற மாட்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில்,” நான்றாக சொன்னீர்கள் பாய் சாஹேப்…! மூத்த சகோதரர்களின் பேச்சைக்கேட்டு இளைய சகோசதரர்கள் வீட்டைவிட்டு வெளியேறினால், எல்லா மூத்த சகோதரர்களும் முன்னோர்களின் சொத்துக்களை அபகரித்துக் கொள்வீர்கள். மொத்த சொத்தில் எனது பங்கைப் பெறாமல் நான் எப்படி கட்சியில் இருந்து வெளியேற முடியும்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தநிலையில், உபேந்திர குஷ்வாஹாவை, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் உமேஷ் குஷ்வாஹா கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவர் கூறுகையில்,” தனது நடத்தையை நினைத்து உபேந்திர குஷ்வாஹா வெட்கப்பட வேண்டும். நிதிஷ் குமார் அவருக்கு நிறைய கொடுத்துள்ளார். ஆனாலும் அவர் கட்சியை உடைக்கப் பார்க்கிறார். உபேந்திர குஷ்வாஹா இன்னும் கட்சியின் உறுப்பினர் படிவத்தை சமர்பிக்கவில்லை.
உபேந்திர சிங்காக இருந்த அவரை நிதிஷ் ஜி உபேந்திர குஷ்வாஹாவாக மாற்றினார். அவரை நாடாளுமன்றத்திற்கும், கவுன்சிலுக்கும் அனுப்பினார். சுயமரியாதை ஏதாவது இருக்கும் என்றால் அவர் கட்சியை விட்டு உடனடியாக விலக வேண்டும். நிதிஷ் குமாரை ஏமாற்ற நினைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஞாயிற்றுக்கிழமை உபேந்திர குஷ்வாஹா மறுத்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கயாவில் சமாதான யாத்திரையில் இருக்கும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில்,” தயவு செய்து உபேந்திர குஷ்வாஹாவை என்னுடன் பேசச் சொல்லுங்கள். அவர் ஏற்கெனவே கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். அவருக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் பாட்னாவில் இல்லாததால் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. அவர் தற்போது உடல் நலம் இல்லாமல் இருக்கிறார் என்பது தெரியும். நான் அவரைச் சந்தித்து இது தொடர்பாக பேசுவேன்” இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.