புதுடில்லி: மாணவர்கள் ஒரு போதும் தங்களது திறமைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக உரையாடும் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ எனப்படும் பரீட்சை வீரர்கள் நிகழ்வு, 2018 முதல் ஆண்டுதோறும் நடக்கிறது.
இதில், பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் பதற்றம் இன்றி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற உத்தியை, பிரதமர் மோடி அவர்களுடன் பகிர்ந்து கொள்வார். இந்த ஆண்டுக்கான நிகழ்வு, புதுடில்லியில் உள்ள தல்கதோரா அரங்கில் இன்று(ஜன.,27)ல் நடந்தது. நாடு முழுவதிலும் இருந்து 36 லட்சம் மாணவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்றனர்.
உத்வேகம்
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி வழங்கிய அறிவுரை: தேர்வு குறித்து ஆலோசனை வழங்கும்படி நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் ஆண்டுதோறும் எனக்கு கடிதம் எழுதுகின்றனர். நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் எழுதும் கடிதம் உத்வேகத்தை அளிக்கிறது.
உங்கள் தாயின் நேர மேலாண்மை திறனை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஒரு தாய் தான் செய்யும் மகத்தான பணியால், ஒரு போதும் சுமையாக இருப்பது இல்லை. உங்கள் தாயாரை நீங்கள் கவனித்தால், உங்கள் நேரத்தை எவ்வாறு சரியாக நிர்வகிப்பது என்பது உங்களுக்கு புரியும்.
அழுத்தம் கூடாது
குடும்பத்தினருக்கு உங்கள் மீது எதிர்பார்ப்பு இருப்பது இயற்கையானது. ஆனால், அவர்கள் அந்தஸ்து உள்ளிட்டவற்றுடன் இணைந்திருந்தால் அது தவறு. குழந்தைகளுக்கு அழுத்தம் தரக்கூடாது என பெற்றோர்களை கேட்டு கொள்கிறேன். அதேநேரத்தில், மாணவர்கள் தங்களது திறமைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. தங்களது இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும்.
சில மாணவர்கள் தங்களன் படைப்பாற்றலை, தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர். தேர்வில் ஏமாற்றுவது ஒரிரு தேர்வுகளில் வேண்டுமானால் பலனளிக்கலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் அது பயன்படாது. அதனால், அந்த பாதையை தேர்வு செய்யக்கூடாது.
அந்த மாணவர்கள் தங்களின் நேரத்தையும், ஆற்றலையும் நல்ல முறையில் பயன்படுத்தினால், அவர்கள் வெற்றியின் உச்சத்தை அடைவார்கள். வாழ்க்கையில் குறுக்கு வழிகளை நாம் ஒரு போதும் தேர்வு செய்யக்கூடாது. நம் மீது கவனம் செலுத்த வேண்டும்.
கடின முயற்சி
தேர்வு நேரத்தில் கடின உழைப்பை கொடுக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் முயற்சி எப்போதும் வீணாக போகாது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். கடினமாக உழைக்கும் மாணவர்களுக்கு அது எப்போதும் வாழ்க்கையில் பயனளிக்கும். கிரிக்கெட்டில் பேட்டிங் செய்பவர், சிக்சர், பவுண்டரி, கூச்சல்களை புறக்கணித்து, வீசப்படும் பந்து மீது கவனம் செலுத்துவார். அது போல் மாணவர்களும் தங்களது வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மாணவர்கள் ஆர்வம்
‘பரிக்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த ஆண்டு மாணவர்கள் அதிகம் பேர் ஆர்வம் காட்டினர். இந்தாண்டு 38 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 15 லட்சம் அதிகம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்