குஜராத் கலவரம்: பிபிசி ஆவணப்படத்துக்குத் தடை; தொடரும் திரையிடல்களும் எதிர்ப்புகளும் – நடப்பது என்ன?

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இரண்டு பாகங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் சென்ற வாரம் வெளியானது. இது வெற்றுப் பிரசாரத்தைப் பரப்புவதாகவும் இந்திய ஒருமைப்பாட்டை குலைப்பதாகவும் கூறி, சமூக வலைதளங்களில் அது தொடர்பான அனைத்து இணைப்புகளுக்கு மத்திய ஒளிப்பரப்பு அமைச்சகம் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி தடை விதித்தது. இந்தத் தடை எதிர்க்கட்சிகள் சார்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதன் விளைவாக, தடை செய்யப்பட்ட ஆவணப்பட்டதைப் பொது வெளியில் திரையிடுவது அதிகரித்தது.

திரையிடப்படும் பிபிசி-யின் ஆவணப்படம்

குறிப்பாக, டெல்லியில் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் இந்த ஆவணப்படத்தை திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கல்லூரியின் தடையை மீறி திரையிடப்பட்டதால் நிர்வாகம் மின்சாரத்தைத் துண்டித்ததாக தகவல் வெளியாந்து. அதையும் மீறி மாணவர்கள் ஆவணப்படுத்தை லேப்டாப், அலைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொண்டிருந்ததால் ஏபிவிபி அமைப்பினர் மாணவர்கள் மீது கற்களை வீசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மேல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஜே.என்.யூ

இந்த சம்பவத்துக்குப் பிறகு பேசிய ஜே.என்.யூ மாணவர் அமைப்பின் தலைவர் ஐஷி கோஷ், “நாங்கள் ஆவணப்படத்தை திரையிடுவதைத் தடுக்கும் நோக்கத்தில் மின்சாரம் துண்டிப்பு போன்ற தடைகளை கல்லூரி நிர்வாகமும், சில அமைப்பினர்களும் இயங்கி வருகின்றனர். ஆனால், நாங்கள் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டுள்ளோம். எனவே இந்த ஆவணப்படத்தைப் பார்ப்போம்,” என்றார்.

ஆனால் இதை கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டு செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக தொழில்நுட்ப பிரச்னை காரணமாக மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறியிருந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஜே.என்.யூ கல்லூரி வளாகம்

அதேபோல், கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு என பல பகுதிகளில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பு, இந்திய மாணவர் கூட்டமைப்பு, மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

கேரளாவில் திரையிடப்பட்ட பிபிசி ஆவணப்படம்

இது குறித்து பேசிய அமைப்புகள், “பிபிசி ஆவணப்படத்தை மூடி மறைக்க மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. ஆனால், இதை திரையிட்டு நாங்கள் மக்களுக்கு இதை தெரியப்படுத்துக்கிறோம். இதை கேரளாவில் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் திரையிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்”, என்றார்கள்.

புதுவை கல்லுரியில் இந்த ஆவணப்படத்தைப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரையிட நிர்வாகம் தடை விதித்தது. அதை விடுதி அறையில் பார்க்கவும் தடை விதித்து, இணைய சேவை அந்தப் பகுதியில் முடக்கப்பட்டது. இதனால் அதை பதிவிறக்கம் செய்யப்பட்டத்தை 100-க்கும் அதிகமாக மாணவர்கள் ஒன்று கூடி பார்த்தனர். அப்போது, ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் அதற்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டதாகவும், அவர்களை சுட்டு தள்ளுங்கள் என மாணவர்கள் நோக்கி முழக்கமிட்டதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், சென்னையில் தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் பிரியதர்ஷினி உட்பட அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹுவா மொய்த்ரா ட்விட்டர் பக்கம்

இப்படி நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தைத் திரையிடுவதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை அரசாங்கம் முடிவு செய்யவேண்டாம். எனவே சென்சாரை தடை செய்யுங்கள் என்னும் வாதம் வைக்கப்படுகிறது. மேலும் பலரும் அனைவரும் இதை நிச்சயம் பார்க்க வேண்டும் என கூறி ஆவணப்படம் இடம்பெறுள்ள இணையதள இணைப்பு மற்றும் வீடியோவை தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மற்றும் வழக்கறிஞர் பிரசாத் பூஷன் ஆகியோர் தங்கள் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

பிபிசி ஆவணப்படம்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பத்திரிக்கையாளர் பிரியன், “மத்திய அரசு இதற்கு தடை செய்ய வேண்டிய தேவை இல்லை. இவர்கள் தடை விதித்ததால் அதை மக்களுக்கு தெரியப்படுத்த தற்போது பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குஜராத் கலவரம் சம்பவம் நடந்து முடிந்த இந்த 20 ஆண்டுகளில் மோடி மீது வைக்கும் விமர்சனகள் எதுவும் மாறவில்லை. குறிப்பாக, அவரிடம் கேட்டகப்பட்ட எந்தக் கேள்விகளுக்கும் அவர் பதில் தரவில்லை என்பதும் அவர் மீதான நம்பகத்தன்மையின்மை அதிகரித்தது. எனவே அதை முழுமையாக விசாரித்து இங்கிலாந்து அரசாங்கம் நிதி வழங்கி இயக்கப்படும் அரசாங்க நிறுவனமான பிபிசி ஆவணப்படத்தை வெளியிட்டது.

அதில் தவறு இருப்பதாக நினைத்தால் அந்த நாட்டுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவிக்கலாமே?… அப்படி செய்தால் அந்த நாட்டுடன் இருக்கும் உறவு முறிந்துவிடும் என்பதால் இதற்கு இத்தியாவில் தடை விதித்திருக்கிறார்கள். அதேபோல், ட்விட்டர், யூடியூப் போன்ற நிறுவனங்ககள் இந்திய அரசு சொல்வதைக் கேட்டு அதை முடக்குகிறது. ஆனால், இவர்கள் தன்னிச்சயாக செயல்பட வேண்டும். உண்மையில், இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கும் ஆவணப்படத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து பிறகு அதில் அந்த நிறுவங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

பிரியன்

மத்திய அரசு தடை விதித்திருக்கும் போது, ஆவணப்படத்தில் இருக்கும் உண்மையை மக்களிடம் எப்படி எடுத்து சொல்வார்கள். அதனால் நாடு முழுவதும் திரையிடுகின்றனர். குறிப்பாக, கருத்து சுதந்தரத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அதைத் திரையிடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அதையும் இந்த அரசு மின்சாரம், இணையம் என அனைத்தும் முடக்கி “டிஜிட்டல் அவசர காலம்” (Digital Emergency) இந்தியாவை உருவாக்குகின்றதோ…என்ற அச்சம் எழுகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.