வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த பழம்பெரும் தெலுங்கு நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு வயது 86.
சிறுவயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்த நடிகை ஜமுனா, கடந்த 1953-ம் ஆண்டு வெளியான புட்டிலு என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் ராமராவ், அக்கினேனி என அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் இதுவரை 198 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிலிம்பேர் உள்பட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். இவர் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் சிறந்து விளங்கினார்.
1980களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஜமுனா, 1989ம் ஆண்டு ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, அவர் அரசியலில் இருந்து விலகினாலும்1990களில் பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலமானார். நடிகை ஜமுனாவின் மறைவு தெலுங்கு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.