சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்து.. "அயலி" வெப்தொடர் எப்படி உள்ளது? விமர்சனம்!

Ayali Review: தமிழில் தற்போது வெப் தொடர்கள் அதிகமாக வெளியாகி ஹிட் அடித்து வருகின்றன. ஜி5 ஓடிடி தளத்தில் கடந்தாண்டு வெளியான விலங்கு வெப் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ள அயலி என்ற தொடர் தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது. 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் மொத்தமாக நான்கு மணி நேரங்களாக தயாராகியுள்ளது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களாக அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர்.

1990-களில் புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் அயலி என்ற பெண் தெய்வத்தை அந்த ஊர் மக்கள் வணங்கி வருகின்றனர். வயதுக்கு வந்த உடனேயே பெண் குழந்தைகளை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அந்த ஊரில் காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் அந்த ஊரில் எந்த ஒரு பெண்ணும் பத்தாம் வகுப்பு படித்ததே இல்லை என்ற நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்செல்வி என்ற பெண் பத்தாவது படித்து பாஸ் ஆக வேண்டும் என்பதற்காக தான் வயதுக்கு வந்ததை மறைத்து தொடர்ந்து படித்து வருகிறார். பின்பு தமிழ்ச்செல்விக்கு என்ன ஆனது? பத்தாம் வகுப்பு படித்து முடித்தாரா? இதனால் அந்த ஊரில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கதைதான் அயலி.

சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கூறியுள்ளார் இயக்குனர் முத்துக்குமார். பலரும் பேச தயங்கும் கதையை தேர்ந்தெடுத்ததற்காகவே முத்துக்குமாருக்கு தனி பாராட்டுக்கள். தான் சொல்ல நினைத்ததை எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்து இருக்கிறார். கதையின் முக்கிய கதாபாத்திரமாக வரும் அபி நட்சத்திரா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். க்ளோசப் காட்சிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அபியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமால் அந்த கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்துள்ளார். நாம் அன்றாடம் பார்க்கும் ஒருவர் போல் நம் மனதிற்கு தோன்றியிருக்கிறார். அவரின் மலையாளம் கலந்த தமிழை தவிர மற்றபடி சிறப்பாக நடித்துள்ளார்.

ஊர் தலைவராக வரும் சிங்கம் புலி காமெடி பண்ணவில்லை என்றாலும் அந்த கதாபாத்திரமாக சிறப்பாக நடித்துள்ளார். அவரின் மகனாக லிங்கா வில்லனாக அசத்தியுள்ளார். கதையின் இடை இடையிடையே வரும் சில காமெடி காட்சிகளும் நன்றாக உள்ளது. 1990-களில் நடைபெறும் கதை என்றாலும் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் விதமாக தான் அயலி உள்ளது. பெண்களை இந்த உலகம் எப்படி பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை ஆணித்தனமாக எடுத்து கூறி உள்ளது. பெண் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும் பேசி உள்ளனர்.  அயலி – வென்றால்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.