புதுடெல்லி: அந்தமான் நிகோபர் தீவுகளில் ரூ.41,000 கோடி செலவில் அரசு மற்றும் பொதுநிறுவனங்களின் பங்களிப்புடன் கண்டெய்னர் பரிமாற்ற துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 160 லட்சம் கண்டெய்னர்கள் ஒரு சரக்கு கப்பலில் இருந்து மற்றொரு சரக்கு கப்பலுக்கு பரிமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக ஒன்றிய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்தடம் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கண்டெய்னர் பரிமாற்ற துறைமுக திட்டம் சிங்கப்பூர், கிளாங், கொழும்பு துறைமுகங்கள் உள்பட சர்வதேச அளவிலானதாக இருப்பதால், இத்திட்டத்தின் ஒருபகுதியாக இதனையொட்டி விமான நிலையம், நகரியம், மின் ஆலைகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. இந்த கண்டெய்னர் பரிமாற்ற துறைமுகத்தை கட்டமைப்பதில் பங்கு பெற ஆர்வமுள்ள, விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.