இஸ்ரேல்: மதவழிபாட்டு தலம் அருகே பயங்கரவாத தாக்குதல் – துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி – அதிகரிக்கும் பதற்றம்…!

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

அதேவேளை, ஹமாஸ் போன்று மேலும் பல ஆயுதமேந்திய குழுக்களும் மேற்குகரை மற்றும் காசா முனையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆயுதமேந்திய குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்புகளாக கருதி தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதனிடையே, மேற்குகரையின் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கடந்த செவ்வாய்கிழமை அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீன ஆயுதக்குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இஸ்ரேல் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து மேற்குகரையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டது. இந்த ஏவுகணைகளை இஸ்ரேலில் உள்ள ஏவுகணை தடுப்பு அமைப்பு நடு வானில் தடுத்து அழித்தது. இதனால், இஸ்ரேல் – மேற்குகரை இடையே பதற்றம் அதிரித்தது.

இந்நிலையில், இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தளம் அருகே இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதியான பியட் ஹனியா பகுதிக்குள் செல்ல முயற்சித்தான். 7 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு சுமார் அரை கிலோ மீட்டர் சென்ற நிலையில் அந்த பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் – மேற்குகரை இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் இஸ்ரேல் – பாலஸ்தீனர்கள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் சமீபத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.