மதுரை: ஊராட்சி நிதியில் செயலர்கள் முறைகேடு செய்த பணத்தை, தலைவர்களிடம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடி ஊராட்சித் தலைவர் சக்திவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்திய ஊராட்சி செயலர் பல லட்சம் முறைகேடு செய்துள்ளார். இது குறித்து நான் முறையாக புகார் அளித்துள்ளேன். இதன்பேரில், முறைகேட்டுக்குரிய பணத்தை செலுத்துமாறு ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ் ெகாடுக்கப்பட்டது. ஆனால், அந்த பணத்தை அவர் செலுத்தவில்லை. எனவே, முறைகேட்டுக்குரிய பணத்தை செலுத்துமாறு எனக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். எனக்கும், இந்த முறைகேட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இதுகுறித்து நான் முன்பே புகார் அளித்துள்ளேன். முறைகேட்டுக்குரிய பணத்தை என்னிடம் வசூலிப்பது சட்டவிரோதம். எனவே, என்னிடம் வசூலிக்கும் உத்தரவை ரத்து செய்து, ஊராட்சி கணக்கை குழு அமைத்து தணிக்கை செய்யவும், முறைகேடு செய்த பணத்தை ஊராட்சி செயலரிடம் இருந்து வசூலிக்குமாறும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இதே போல் மன்னகுடி ஊராட்சித் தலைவர் லதாவும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முறைகேட்டுக்குரிய பணத்தை ஊராட்சித் தலைவர்களிடம் வசூலிக்கும் நடவடிக்கைக்கு இடைக்காலத்தடை விதித்தார். மேலும், மனுவிற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு விசாரணையை ஜன.31க்கு தள்ளி வைத்தார்.