மாரடைப்பால் மரணித்த 16 வயது மாணவி… காரணம் என்ன?

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கடந்த சில நாள்களாக கடும் குளிர் வீசி வருகிறது. இருப்பினும், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. அந்த வகையில், இந்தூரின் உஷா நகர் பகுதியில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 

அந்த பள்ளியில், விருந்தா திரிபாதி என்ற 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பள்ளியில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சுயநினைவு இழந்து மயக்கம்போட்டு விழுந்துள்ளார். பள்ளியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த ஜன. 25ஆம் தேதி நடைபெற்றுள்ளது. 

அந்த மாணவி, சம்பவ தினத்திற்கு அடுத்த நடைபெற உள்ள குடியரசு தின விழாவிற்கான ஒத்திகைக்காக பள்ளிக்கு சென்றுள்ளார். ஒத்திகையின்போதுதான் அவர் மயக்கம் போட்டு விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், மருத்துவர்கள் சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்ற இயலவில்லை என கூறப்படுகிறது. மேலும், மாணவி மருத்துவமனைக்கு அழைத்துவரும் முன்னரே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

“இதய செயலிழப்புக்கு முன் பிருந்தா முற்றிலும் நலமாக இருந்தார். அவர் அதீத குளிர்ச்சியால் இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்று மாணவியின் உறவினர் தெரிவித்தார். மாவட்ட மருத்துவமனையில் மாணவியின் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அதில் அவர் மயக்கம் போட்டு விழுந்ததன் காரணமாக கன்னத்தில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் மேலும் அவர் மாரடைப்பால் இறந்தார் என்று ஒரு அதிகாரி கூறினார்.

சிறுமி இறக்கும் போது மெல்லிய ட்ராக் சூட் அணிந்திருந்ததாகவும், அவளது வயிற்றில் சிற்றுண்டித் துகள்கள் காணப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, துக்கமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரது கண்களைத் தானம் செய்துள்ளதாக, உறுப்பு தானத்திற்கான இந்தூர் சங்கத்துடன் தொடர்புடைய முஸ்கான் குழுமத்தின் தன்னார்வத் தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இருதயநோய் நிபுணர், மருத்துவர் அனில் பரணி,”கடுமையான குளிர் காலத்தில், குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை, மனித உடலில் உள்ள பல்வேறு ஹார்மோன்களின் அளவு அதிகரித்து, ரத்தக் கட்டிகள் உருவாகி, திடீரென மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். கடுமையான குளிர் காலநிலையை சமாளிக்க மக்கள் சத்தான உணவை உட்கொள்ளவும், உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என அறிவுறுத்தினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.