சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக நிதித் துறை சார்பில் வளர்ந்து வரும் துறைகளுக்கானதொடக்க நிதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்து, முதல்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதிக் கடிதங்களை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்காக ‘தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்’ என்ற புதிய திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில் முனைவோரால் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும். இந்நிதியத்துக்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற கடந்த மே 2022-ல் இருந்து இதுவரை 330 நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவர்களில் இருந்து, தொழில்முனைவு வழிகாட்டுநர்கள், அரசு அலுவலர்கள், முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.7.50 கோடி பங்கு முதலீடு: முதற்கட்டமாக பேக் என் பேக்,யூனிபோஸ், டவ் மேன், எக்கோசாப்ட் சொல்யூசன்ஸ், பீஸ் ஆட்டோமோசன் ஆகிய 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.7.50 கோடி பங்கு முதலீடு செய்வதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். இப்புத்தொழில் நிறுவனங்களில் அரசே முதலீடு செய்வதன் மூலமாக இந்நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் பெருகும்.
தொடக்க நிதியம்: தமிழகத்தில் வளர்ந்து வரும்துறைகளில் உள்ள புத்தொழில் மற்றும் தொழில் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தமிழக அரசு நிறுவியுள்ளது. இந்த நிதியிலிருந்து, வளர்ந்து வரும் துறைகளான மேம்பட்ட உற்பத்தி, இயந்திரவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம், டிஜிட்டல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, உயிர் தொழில்நுட்பம், வெப் 3.0, ஆழமான தொழில்நுட்பம், காலநிலை தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும்.
இந்த நிதியம், தமிழக அரசின் நிதித்துறை மற்றும் தொழில் துறையின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழக உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியத்தில் தமிழக அரசு ரூ.50 கோடி முதலீடு செய்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் டைடல் பூங்கா ஆகியவை ரூ.50 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளன. தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியம், அதன் நிதியை 2023-24-ம் நிதியாண்டில் ரூ.500 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிதியத்தின் மூலமாக நிறுவனங்களுக்கு முதலீடுகள் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தன்னாட்சி முதலீட்டுக் குழுவால் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இ-சந்தை நிறுவனம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கைகள் நிறுவனம், சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் அமைந்துள்ள பிளானிடிக்ஸ் நிறுவனம், சூரிநோவா, மிஸ்டர் மெட் ஆகிய5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முதலீட்டு அனுமதிக் கடிதங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் ச.கிருஷ்ணன், நிதித்துறை செயலாளர் நா. முருகானந்தம், குறு, சிறுமற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் மற்றும் தமிழகஉள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தின் செயல் அலுவலர் வி. அருண்ராய், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.