திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் பெரிய லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. நெல்லையில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் செல்கின்றன. போலீஸார் ஓவர் லோடுக்கு ஏற்றர்போல லஞ்சம் வாங்கிக்கொண்டு கடத்தலுக்கு துணைபுரிவதாகவும் குற்றச்சாட்டு இருந்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸாரும், நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸாரும் இரு மாவட்டங்களிலும் வந்து செல்லும் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். கனிமவளம் மட்டுமல்லாது போதை பொருள்கள் கடத்தல், இறைச்சி, மருத்துவ கழிவுகள் கடத்தல் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸார் வரிசையாக சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனங்களில் சோதனை எதுவும் செய்யாமல், லாரிகளை கடத்திவிட லஞ்சம் வாங்கியுள்ளனர். அதில், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவர் லஞ்சம் பெறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. யாரோ ஒருவர் காருக்குள் இருந்துகொண்டு அந்த வீடியோவை பதிவு செய்ததாக தெரிகிறது.
வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் கேரள எல்லைப்பகுதியில் லாரிகளை அனுமதிக்கும் போலீஸாரை கண்காணித்து, கடத்தல் போன்ற சம்பவங்களை முறையாக தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.