சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 94.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்னுக்குப் பின் முரணாக அந்த வாலிபர் பதிலளித்ததால், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அவரது காலில் பேஸ்ட் போல் தங்கத்தை மாற்றி கால் பாதத்தில் ஒட்டி தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த ரூபாய் 66.82 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 340 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகளின் உடமைகளை சோதனை செய்ததில், லேப்டாப் சார்ஜர் பின்னில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்த ரூபாய் 27.32 லட்சம் மதிப்பிலான 548 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் மூன்று பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூபாய் 94.14 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.