மோர்பி: குஜராத் மாநிலம் மோர்பி பால விபத்து தொடர்பாக 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் 10வது குற்றவாளியாக ஒரேவா நிறுவனத்தின் ஜெய்சுக் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 2 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 26ம் தேதி திறக்கப்பட்டது. இதன் புனரமைப்பு பணிகளை ஒரேவா என்ற நிறுவனம் மேற்கொண்டது. இந்நிலையில், அக்டோபர் 30ம் தேதி இந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்தது.
அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த 250 பேரும் ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் 135 பேர் பலியானார்கள். 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாலம் புனரமைக்கும் பணிகள் சரியாக செய்யப்படாததே விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்து வரும் மோர்பி துணைக்காவல் கண்காணிப்பாளர் பி.எஸ்.சாலா, 1200க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மோர்பி அமர்வு நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜே.கானிடம் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், பால பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ஒரேவா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெய்சுக் படேல் 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.