`இனிமையாகப் பாடும் பலருக்கும் பேச்சிலும் அவ்வளவு இனிமை இருக்காது’ என்று சொல்லப்படுவது உண்டு. அந்தக் கூற்றுக்கு விதிவிலக்கான சிலரில் முக்கியமானவர் டி.கே.கலா. சிறப்பான தமிழ் உச்சரிப்புக்கு உதாரணமான பின்னணிப் பாடகியான கலா, எண்ணற்ற ஹிட் பாடல்களைப் பாடவில்லை; விருதுகளையும் வாங்கிக் குவிக்கவில்லை. ஆனாலும், இவரின் குரலுக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.
பாடகி, குணச்சித்திர நடிகை, டப்பிங் கலைஞர் என பல துறைகளிலும் வெற்றிமுகம் காட்டியவர், திரையிசையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இவருடனான சந்திப்பில், திரைப்பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்களுடன், தன் பர்சனல் பக்கங்கள் சிலவற்றையும் பகிர்ந்தார்…
அம்மா : “பால்யத்துலயே எங்கம்மா சண்முகசுந்தரி கலைத்துறைக்கு வந்துட்டாங்க. நாடக கம்பெனிதான் உலகம்னு வாழ்ந்தாங்க. எங்கம்மா ஒன்றரை வயசுக் குழந்தையா இருந்தபோதே பாட்டி இறந்துட்டாங்க. அதனால, தாயின் அரவணைப்பு இல்லாம சிரமப்பட்டுதான் வளர்ந்திருக்காங்க. ‘தாயற்ற பொழுதே சீரற்று போச்சு’னு தன் போராட்ட வாழ்க்கையைச் சொல்லிச் சொல்லியே, அஞ்சு மகள்களையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினாங்க.
சினிமாவுல வில்லியா, அம்மாவா, சகோதரியானு வித்தியாசமான ரோல்கள்ல எங்கம்மா நடிச்சாங்க. ஆனா, ஆரம்பகாலத்துல அவங்களுக்கு சரியான அடையாளம் கிடைக்கல. பாடகியா என்னை புகழ்பெற வைக்கணும் போராடினாங்க. எனக்காக சில காலம் நடிக்கிறதையும் எங்கம்மா நிறுத்தினாங்க. பிறகு, 1980-கள்ல நகைச்சுவை வேடங்கள்ல நடிச்சாங்க. `மிடில் கிளாஸ் மாதவன்’ படத்துல வடிவேலுவுக்கு அம்மா ரோல்ல எங்கம்மா நடிச்சாங்க. அந்த கேரக்டர்ல எங்கம்மா நடிக்காமப் போயிருந்தா, இளைய தலைமுறைக்கு எங்கம்மாவை பத்தி தெரியாமலேயே போயிருக்கும். அம்மா, சினிமாவுல பணமோ புகழோ அதிகம் சம்பாதிக்கல. ஆனா, திரை ஜாம்பவான்கள் பலரின் அன்பை நிறைவா சம்பாதிச்சாங்க.
சவால்கள் : `சினிமா உலகத்துல காலு வெச்ச இடமெல்லாம் கண்ணிவெடி’னு நடிகர் வடிவேலு ஒரு மேடையில பேசியிருப்பார். அந்தக் கதை எனக்குச் சரியா பொருந்தும். நான் பாடகியான புதுசுல, ‘சின்னப் பொண்ணா இருக்கு… இதுக்கு என்ன சான்ஸ் கொடுக்கிறது?’, ‘ஹீரோயினுக்குப் பாட இப்பவே வாய்ப்பு தரணுமா?’, ‘இந்தப் பொண்ணுக்கெல்லாம் சான்ஸ் தரணுமா?’னு பலரும் எனக்கு எதிர்ப்பா பேசினாங்க. ஒவ்வொரு நிலையிலுமே இந்த மாதிரியான எதிர்ப்புகள் தொடர்ந்துச்சு. அந்தச் சவால்கள் இப்பவும் இருக்குது!
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் : மறைந்த இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி ஐயா இசையில, ‘நந்தா என் நிலா’, ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ ஆகிய படங்கள்ல நான் பாடினேன். அந்தப் படங்களுக்கான இசைப்பதிவுக்கு இளையராஜா சார்தான் கீபோர்டு வாசிச்சார். பல இசையமைப்பாளர்கள் இசையில நான் பாடியிருக்கேன். ஆனா, இளையராஜா சார் மியூசிக்ல இதுவரை நான் பாடினதில்லை. அதனால, எனக்கு வருத்தமில்லை. எனக்கு வாய்ப்பு கொடுக்க அவருக்கு இஷ்டமில்லைனு நினைக்கிறேன். ஏன்னா, எனக்குப் பாட வாய்ப்பு கொடுக்கணும்னு அவர் நினைச்சிருந்தா, அவரைத் தடுக்க யாரும் கிடையாது இல்லையா?
ரஹ்மான் தம்பி இசையில பல பாடல்கள் பாடியிருக்கேன். `தாஜ்மஹால்’ படத்துல `செங்காத்தே…’ பாடல் பாட ரஹ்மான் தம்பி ஒருமுறை என்னைக் கூப்பிட்டார். அப்போ திருப்பதிக்குப் போகத் திட்டமிட்டிருந்தேன். அதனால, அந்தப் பாடல் வாய்ப்பு எனக்கு வராதுனு நினைச்சேன். ஆனா, நான் திருப்பதி போயிட்டு ரெண்டு நாள்கள் கழிச்சு வர்ற வரைக்கும் காத்திருந்து, என்னைப் பாட வெச்சு ரெக்கார்டிங் செஞ்சார் ரஹ்மான். அந்தப் பாட்டு வெளியானதும், எம்.எஸ்.விஸ்வநாதன் சார் போன்ல என்னைப் பாராட்டினார். பெரிய இசையமைப்பாளர்ங்கிற எண்ணமே ரஹ்மான் தம்பியின் செயல்பாடுகள்ல தெரியாது. எல்லோர்கிட்டயும் எளிமையா பழகும் குணமும் அவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
வாழ்க்கையில் முக்கியமான நபர் : நான் பாடகியான புதுசுல. இசையமைப்பாளர் தேவா அண்ணன் தனி இசைக்குழு வெச்சிருந்தார். எனக்குக் கச்சேரி வாய்ப்பு வந்தா, ஆர்க்கெஸ்ட்ரா தயார் பண்ணச் சொல்லி தேவா அண்ணன்கிட்டதான் போய் நிற்பேன். உடனே ஏற்பாடு செஞ்சு கொடுப்பார். அவரின் இசைக்குழுவுடன் சேர்ந்து கல்யாண கச்சேரி ஒண்ணுல நான் பாடினேன். அந்தக் கச்சேரியை ரசிச்சுக் கேட்ட எம்.ஜி.ஆர் ஐயா, அதன்பிறகுதான் `போய்வா நதியலையே’ பாடலைப் பாட எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். காலம் முழுக்க தேவா அண்ணனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.
யாருடன் நடிக்க ஆசை : என் தங்கச்சி பையனைப் பார்க்கும்போதெல்லாம் நடிகர் தனுஷ் ஞாபகம்தான் எனக்கு வரும். தோற்றத்துக்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லைங்கிறதுக்கு உதாரணமா, எத்தகைய ரோல்லயும் அநாயாசமா நடிக்கிறார் அவர். தனுஷுக்கு அம்மாவா நடிக்க வாய்ப்பு வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்!”