குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் குடியரசு தின விழா நடைபெற்றது. டெல்லி கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்முதேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி கொடி ஏற்றி கொடிவணக்கம் செலுத்தியவுடன் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தஞ்சை பெரியகோவில், ஒளவையார், வேலுநாச்சியார், முத்துலட்சுமி ரெட்டி, இயற்கை விவசாயி பாப்பம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வரி, மூவலூர் ராமாமிர்தம் உள்ளிட்டோரின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன.
டெல்லியில் நடந்த குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் சிறந்த ஊர்திக்கு இணையத்தில் வாக்களிக்கும் பிரிவில் தமிழ்நாடு என்பதற்கு தமிழ்நாயுடு என குறிப்பிடப்பட்டிருந்தது. ஒன்றிய அரசின் http://MyGov.in இணையதளத்தில் சிறந்த அலங்கார ஊர்திக்கு வாக்களிக்கும் பிரிவில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக ‘தமிழ் நாயுடு’ என இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.