ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வில் 33 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு..!!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதிக்கான இரண்டாம் தாள் தேர்வானது பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கு விண்ணப்பித்த 33 தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் விண்ணப்பங்கள் குறிப்பிட்ட சில காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டதாக ஆசிரியர்கள் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நபர்களில் 9 பேர் பாலிடெக்னிக் தேர்வு முறை கேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், 2 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் தேர்வின் பொழுது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், மீதமுள்ள 21 பேர் விண்ணப்பிக்கும் பொழுது சரியாக பூர்த்தி செய்யாத வாரும் புகைப்படம் ஒட்டாமலும் கையொப்பம் போடாமலும் விண்ணப்பித்ததன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டுகளை தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று எந்தத் தேர்வு மையம் என்பது தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களின் தேர்வு மையங்களை மாற்ற வேண்டுமென வைக்கப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களின் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.