ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்

போட்செப்ஸ்ட்ரூம்,

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ஷபாலி வர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 107 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக ஜார்ஜியா பிலிமெர் 35 ரன்னும், இசபெல்லா 26 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டும், திதாஸ் சாது, மன்னட் காஷ்யப், ஷபாலி வர்மா, அர்ச்சனா தேவி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 10 ரன்னிலும், அடுத்து வந்த சவுமியா திவாரி 22 ரன்னிலும் அன்னா பிரோவ்னிங் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். தொடக்க வீராங்கனை சுவேதா செராவத் 61 ரன்னுடனும் (45 பந்து, 10 பவுண்டரி), திரிஷா 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய பார்ஷவி சோப்ரா ஆட்டநாயகி விருது பெற்றார்.

மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 99 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 25 ரன்னும், கேப்டன் கிரேஸ் 20 ரன்னும், ஜோசி குரோவ்ஸ் 15 ரன்னும், செரேன் ஸ்மேல் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங் கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலியாவால் இந்த எளிய இலக்கை கூட எடுக்க முடியவில்லை. அந்த அணி 18.4 ஓவர்களில் 96 ரன்னில் அடங்கியது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.