Ranbir Kapoor Viral Video: இந்தியாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் ஏன் யூ-ட்யூப் பிரபலங்கள் என பல்வேறு பிரிவு பிரபலங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் நிறைந்து உள்ளன. பொழுதுபோக்கு என்பதை தாண்டி அதன் மீது தீரா விருப்பம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் யூ-ட்யூப் மூலம் பிரபலமைடந்த டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோரின் ரசிகப்படைகளே அதற்கு உதாரணமாக கூறலாம். அப்படியிருக்க, இந்த பிரபலங்கள் பொதுவெளியில் தென்பாட்டாலோ அல்லது பொது நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்தாலோ ரசிகர்கள் இனிப்பு மேயும் ஈயாக குவிந்துவிடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தி, பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பதே தனி வேலையாகிவிட்டது.
தற்போதெல்லாம் பிரபலங்களை பார்த்தாலே மொபைலில் போட்டோ, செல்ஃபி கேட்டு வரிசை நிற்க, பிரபலங்கள் பலரோ எரிச்சலைடந்து விடுகின்றனர். தமிழ்நாட்டில் நடிகர் சிவகுமார் ஓர் உதாரணம். இதில் எந்த தவறும் இல்லை என்றும் பிரபலங்களும் சகஜமாக பொதுவெளியில் நடமாட அனுமதிக்கவில்லை என்றால் அவர்களுக்கும் கோபம் வரும்தானே என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
Celebrities should think twice before acting on impulse like #Ranbirkapoor did today. pic.twitter.com/lxrh0apfwj
— Viral Bhayani (@viralbhayani77) January 27, 2023
மற்றொரு தரப்போ, ரசிகர்கள் கூட்டத்தை காணவும், தங்களும் செல்வாக்கை நிரூபிக்கவும் தானே பிரபலங்கள் வெளியில் வருகிறார்கள் என்றும் வாதிடுகின்றனர். எது எப்படியோ, ரசிகர்களின் பொருள்களை உடைப்பது தவறு என்றாலும், உடைக்கவே உடைக்காத செல்போனை உடைத்துவிட்டதாக வீடியோவை வைரலாக்குவது மகாதவறு தானே.
தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், தன்னுடன் செல்ஃபி எடுத்த ரசிகரின் செல்போன் பிடுங்கி தூக்கி வீசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அப்படி அவர் யார் செல்போனையும் தூக்கி வீசவில்லை என்றும், அது அவர் நடித்த செல்போன் விளம்பரத்தின் ஒரு பகுதி என்றும் கூறப்படுகிறது.
மொபைல் நிறுவனம் விளம்பரத்தின் சில பகுதிகள் மட்டுமே வைரலாகி வருவதாகவும், முழுமையான வீடியோ வெளியானால் இது தவறான பரபரப்பை செய்யும் வீடியோ என்று அம்பலமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், இது ஒன்றும் புதிதான சம்பவம் இல்லை.
சில நாள்களுக்கு முன் நடிகை அனுஷ்கா சர்மா, தன் அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதாக ஒரு பிராண்ட் மீது குற்றஞ்சாட்டு வகையில் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த நிறுவனத்தின் பிராண்ட அம்பாஸிடர் அவர்தான் என்பது பின்னர் தெரியவந்தது. இதுபோன்ற விளம்பர வியூகங்கள் முன்பிருந்த வழக்கத்தில் இருப்பதுதான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.