ஈரோடு கிழக்கு: சிவபிரசாந்த்… தந்தை டு மகன்… கிரிக்கெட் வீரரை களம் இறக்கிய டி.டி.வி.தினகரன்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனின் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அக்கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள சிவபிரசாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். 29 வயது இளைஞரான இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரியாவார்.   கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர் மாவட்ட அளவில் நடைபெற்ற  கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.

திருமணமான இவருக்கு கீர்த்தனா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி கீர்த்தனா மயக்கவியல் நிபுணராக உள்ளார். சிவபிரசாந்த்தின் தந்தை வழக்கறிஞர் சம்பத் என்கிற முத்துக்குமரன், கடந்த 2021ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக., சார்பில் போட்டியிட்டு 1,209 வாக்குகளை பெற்று தோல்வியுற்றார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக, விஜயகாந்த் கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

ஈரோடு, குமலன் குட்டையிலுள்ள செல்வம் நகரில் வசித்து வரும் சிவபிரசாந்த் தற்போது ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். இதற்கு முன்பு கடந்த 2017-ல் ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராகவும், 2018-ல் இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை என அணி இரண்டாக பிரிந்தபோது, மாவட்ட இளைஞர் பாசறை  தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு மாநில தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணை செயலாளராகவும், 2022 முதல் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

சிவபிரசாந்த் நம்மிடம் பேசுகையில், “தற்போதைய தி.மு.க. ஆட்சியில் எந்த நலத்திட்டங்களும் மக்களை சென்றடையவில்லை. ஈரோடு நகர்ப்பகுதியில் தற்போதுள்ள சாலைகள் அனைத்தும் பழுதாகியுள்ளன. 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகளில் தாராளமாக மது கிடைக்கிறது. ஏழை மக்கள் மதுக்கடைகளில் கிடப்பதால் அவர்கள் குடும்பம் தவிக்கிறது. கனி மார்க்கட், நேதாஜி மார்க்கட், பூ மார்க்கட் போன்றவற்றில் ஏற்கெனவே கடை நடத்தி வந்தவர்களுக்கு மீண்டும் கடை வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் ஏமாற்றி வருகிறது. நான் வெற்றி பெற்றால் அவர்களுக்காக குரல் கொடுப்பேன்.

டி.டி.வி. தினகரனுடன் வேட்பாளர் சிவபிரசாந்த்

தற்போதைய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வயது மூப்பின் காரணமாக வாக்கு சேகரிக்க வர முடியாமல் தனது மகனை விட்டு வாக்கு சேகரிக்கிறார். இளைஞராக உள்ள என்னை தேர்ந்தெடுத்தால் எந்த நேரமும் மக்களுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். களத்தில் நின்று மக்களுக்காக போராடுமாறு எங்கள் கட்சியின் தலைவர் டி.டி.வி.தினரகன் கூறியுள்ளார். ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கி விட்டேன். வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் சனிக்கிழமை முதல் கருங்கல்பாளையத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்குவேன்.

தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை சண்முகவேலு தலைமையில் பாண்டுரங்கன், செந்தமிழன் உள்ளிட்டோர் அடங்கிய 294 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.