வாய் சுகாதாரம் குறித்து அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரான பா.நிவேதிதா, இந்த அத்தியாயத்தில் பல் ஈறு, எலும்பு, பற்காரை உள்ளிட்ட பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகளை விளக்குகிறார்…
சென்ற வாரம், பல் மருத்துவமனைக்கு விநோதமான சந்தேகத்துடன் நோயாளி ஒருவர் வந்தார். “ஒரே நாளில் என் பல்லெல்லாம் ஆட்டம் கண்டு, வாயிலிருந்து கீழே விழுவது போல் கனவு கண்டேன். இப்படி நடக்குமா? ” என்று ஒரு கேள்வியைக் கேட்டார். இதுவோர் அதீத கற்பனை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், வாய் சுகாதாரத்தில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால், இது நாளடைவில் நடக்கக்கூடிய ஒன்றுதான்.
நாம் பற்களை இழக்க, பல் சொத்தை எப்படி ஒரு காரணியோ அப்படித்தான் பற்களின் ஆட்டமும் ஒரு காரணம் ஆகும். எனவே, இந்த வாரம் பற்களைச் சுற்றியுள்ள ஈறு, தசைநார் (ligaments) மற்றும் எலும்புகள் பற்றி பேசலாம். ஏனென்றால் இவை தான் நம் பற்களை வாயில் பிடித்து வைக்கின்றன.
நம் பற்களை சுற்றி பிங்க் நிறத்தில் ஈறு என்ற பகுதி இருக்கிறது. இதை மருத்துவத்தில் GINGIVA என்று கூறுவோம். இது பற்களைச் சுற்றி ஒரு காலர் போல் அமைந்திருக்கும். இதைத் தவிர பற்களைச் சுற்றி நார் ( fibre) போன்ற கண்ணுக்குத் தெரியாத ஒரு தசைநார் இருக்கும். இந்த மெல்லிய fibres தான், நம் பற்களை தாடை எலும்புடன் இணைக்கின்றன. பற்களைச் சுற்றி உள்ள இந்த ஈறு, தசைநார் மற்றும் எலும்பு, இவற்றின் நிலை நன்றாக இருந்தால் பற்களின் ஆயுள் ஓஹோவென்றிருக்கும். ஆனால் பெரும்பாலானோருக்கு இவை நன்றாக இருப்பதில்லை. ஏன்? இதற்கு நமது அலட்சியம்தான் காரணம். எப்படி… கூறுகிறேன்…. கேளுங்கள்!
இந்த நேரத்தில் உயிர்ப்படலம் (biofilm), plaque என்ற இரண்டு சொற்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. Biofilm என்பது பற்களின் மேல் படிந்திருக்கும் ஒரு மெல்லிய படிமம் ஆகும். உணவுப் பொருள்கள் பற்களின் மேலே தங்குவதால் உண்டாகிறது. இதன் தொடர்ச்சியாக பற்களின் மேல் உருவாகும் படிமம் தான் Plaque எனப்படுவது. இநதப் படிமம் உருவாக இரண்டொரு நாள்கள் ஆகும்.
அதன் பிறகு இது ஒரு நிலையான structure ஆக பற்களின் மேல் படிந்து விடும். இது, பாக்டீரியாக்களின் புகலிடமாக விளங்கத் தொடங்குகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு மி.கி. plaque-ல் கிட்டத்தட்ட கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்கும். சிலருக்கு இந்த நேரத்தில் ஈறிலிருந்து ரத்தக்கசிவு இருக்கும். வாய் துர்நாற்றம் இருக்கும். இதை எப்படித் தடுப்பது என்று பிறகு சொல்கிறேன்.
இப்படியாக plaque உருவான பிறகு அடுத்ததாக calculus என்ற பற்காரை உருவாகிறது. இது பற்களின் மேல் கெட்டியாக வெள்ளை நிறத்திலோ, பச்சை நிறத்திலோ இருக்கும். பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே இடைவெளி உண்டாகி உணவுப்பொருள்கள் மாட்டிக்கொள்ளும். இதை எடுக்கிறேன் என்று, நாம் குச்சியை வைத்துக் குத்த, அந்த இடைவெளி பெரிதாகும்.
இப்படியாக பற்களின் பிடிப்புத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். அடுத்த நிலையாக பற்களைச் சுற்றி உள்ள எலும்பு கொஞ்சமாகக் கரையத் தொடங்கும் ( Bone loss). இது தொடர்ந்து கொண்டே போகப்போக பற்கள் ஆடத் தொடங்கும்.
எனவே, இதற்கு biofilm தான் இதற்கு தொடக்கப் புள்ளி. இது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்… அட, சாப்பிட்டால் வரத்தான் செய்யும். அப்புறம் ? பல் தேய்த்தால் போய்விடும். பல் சொத்தையாகாமல் இருக்கவும், பல் ஆடாமல் இருக்கவும் பல் ஒழுங்காகத் தேய்க்க வேண்டும். சில நேரங்களில் பற்கள் ஆடும்போது, சுற்றி உள்ள ஈறுகளில் வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. சீழ் வடியவும் செய்யும். பொறுத்துக் கொள்ள முடியாத வலி இருக்கும். இது ஈறுகளில் இருந்து வரும் வலி. இப்படியாக பற்கள் ஆடுவதன் அறிவியல் அடிப்படையைப் பார்த்தாகி விட்டது.
ஈறு பிரச்சனையும் வாய் துர்நாற்றமும்
இப்போது ஈறு பிரச்னை, வாய் துர்நாற்றம் மற்றும் பற்கள் ஆடுவதற்கான சிகிச்சை முறைகளைப் பார்க்கலாம். ஈறு பலவீனமாகிவிட்டது என்பதற்கான முதல் அறிகுறி, அதில் இருந்து ரத்தம் கசியும். உடனே பல் மருத்துவரிடம் வந்து பற்களை மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். விளம்பரங்களில் பார்ப்பது போல் வெறும் பேஸ்ட் போட்டுத் தேய்த்தால், எந்தப் பலனும் உண்டாகாது. பல் சுத்தம் செய்வது (scaling). இதுதான் சரியான சிகிச்சை முறை. அதன் பிறகு ஒழுங்காக பற்களைத் தேய்த்து, plaque வராமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். வாய் துர்நாற்றத்திற்கும் இதுதான் சிகிச்சை முறை.
அடுத்த நிலையிலான பல் ஆட்டத்திற்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் பல உள்ளன. இவை, பற்களை நிலைத்து நிற்க வைக்கும். ஆனால், இதுவும் மிகவும் கடகடவென ஆடும் பற்களுக்குச் செய்ய முடியாது. அந்தப் பற்களைப் பிடுங்கத்தான் வேண்டும். இதுதவிர, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சரியான முறையில் Dental floss பயன்படுத்தினால், பல் இடுக்கில் உணவு மாட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளலாம். Mouth wash-ம் பரிந்துரையின் பேரிலேயே உபயோகிக்க வேண்டும். பற்களின் கரை, பற்காரை இவை இரண்டும் ஸ்கேலிங் (Scaling) செய்தால் மட்டுமே நீங்கும். ஸ்கேலிங் செய்த பிறகு மருத்துவரின் அறிவுரையின் பெயரில் சரியான முறையில் பல் தேய்த்தால் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
பெரும்பாலும் வாசகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விடைகளைக் காண்போம். ஸ்கேலிங் செய்வதால் பற்கள் ஆடாது. மாறாக இன்னும் மோசமாகும் நிலையைத்தான் இது தடுக்கும். அடுத்து ஸ்கேலிங் செய்வதால் பற்கள் தேயாது. ஸ்கேலிங் செய்த பின்பு இரண்டொரு நாள்கள் பற்களில் சுற்றி கூச்சம் இருக்கும். இது முற்றிலும் தற்காலிகமானதே. ஸ்கேலிங் செய்த பின்பு பற்களினுடே இடைவெளி வந்தது போல் சிலர் உணர்வர். இது அந்த இடத்தில பற்காரை நீங்கியதால் வந்த இடைவெளிதான். பயப்பட வேண்டியதில்லை. மிகவும் கெட்டியான பற்காரையாக இருந்தால் பற்களைச் சுத்தம் செய்யும்போது சிறு வலி இருக்கும்.
எனினும் அதுவும் தற்காலிகமானதே. இது தவிர சர்க்கரை நோயாளிகளும் ( Diabetics) ,வைட்டமின் சி சத்துக் குறைபாடு உள்ளவர்களும் ஈறின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இந்த நோயின் பக்கவிளைவுகளாக ஈறுகள் பாதிக்கப்படும் என்பது அறிவியல் உண்மை.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு நோயாளிக்கு வந்த அதீத கற்பனை உண்மையாகாமல் இருக்க, இந்த வாரத்தின் TAKE HOME MESSAGE இவை தான்:
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சரியான முறையில் கவனத்தோடு பற்களைத் தேய்த்து Plaque உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்கேலிங் பற்றி மனதில் உள்ள அச்சத்தைக் களைய முற்பட வேண்டும். டென்ட்டல் ஃப்ளாஸ் யன்படுத்த, மருத்துவரின் அறிவுரைப்படி பழகிக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதித்துப் பார்ப்பதோடு, வாய், பல் சுத்தத்தில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பகாலம், மாதவிடாய் நேரம் மற்றும் பூப்பெய்தும் பருவத்தில் பற்கள் மற்றும் ஈறு ஆரோக்கியத்தில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இப்படியாக நாம் நல்ல பற்களோடும் நல்ல சொற்களோடும் வாழ்வோம். இதையும் மீறி பற்களை இழக்க நேரிட்டால் அவற்றை கட்டும் முறை குறித்து, அடுத்த வாரம் பார்க்கலாம்.