மும்பையில் லவ் ஜிகாத் திற்கு எதிராக சகால் இந்து சமாஜ் சார்பாக இந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா பேரணி நடத்தப்பட்டது. தாதரில் தொடங்கிய, இதில் ஆயிரக்கணக்கானோர் காவி உடைகளுடன் கலந்து கொண்டனர். பேரணி பிரபாதேவி காம்கார் மைதானத்தில் சென்று முடிந்தது. அங்கு பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஷ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகள் சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டனர். தெலங்கானாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய பேச்சாளர் ராஜா சிங் என்பவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இவர் மொகமது நபிக்கு எதிராக பேசியதற்காக பாஜக-வால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஆவார்.
அவர் தனது உரையில், “காதல், நில ஜிகாத் நிறுத்தப்படவில்லையெனில் இங்கு தற்போது ஏற்பட்டு இருக்கும் தீப்பிழம்பு எரிமலையாக மாறும். அரசு காதல் ஜிகாத் தடுப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும். இந்து பெண்களை முஸ்லிமாக மாற்ற சதி நடக்கிறது. சிமி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு காதல் ஜிகாத்தை கையில் எடுத்திருக்கின்றனர். இதற்காக வெளிநாட்டில் இருந்து நிதி பெறுகின்றனர். எனவே இந்துக்கள் முஸ்லிம் வியாபாரிகளுடன் வர்த்தகம் செய்யக்கூடாது. அவர்களை புறக்கணிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் பாஜக-வின் ஆசிஷ் ஷெலார், ராஜ்புரோஹித் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா தலைவர்கள் சிலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அனைவரும் ஒவ்வொரு அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் யாரும் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சகால் இந்து சமாஜ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறி பேசவில்லை. அனைத்து இந்து அமைப்புகளும் சேர்ந்து இந்த பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன.