அதிமுகவில் உட்கட்சி மோதல் காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுக்கொரு பக்கமாக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் நான் தான் என்று எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓ.பன்னீர் செல்வமும் மாறி மாறி கூறிவருகின்றனர். இருவரும் தேர்தல் பணிக்குழுவையும் நியமித்துள்ளனர். இரு தரப்பும் போட்டியிட முனைப்புக் காட்டுவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? முடக்கப்பட வாய்ப்புள்ளதா என்றும் அரசியல் அரங்கில் கேள்விகள் எழுந்து வருகின்றன.
அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
எடப்பாடி பழனிசாமி
தரப்பு இரட்டை இலை சின்னத்திற்காக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்தது. அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வில் எடப்பாடி தரப்பில் அரிமா சுந்தரம் முறையீடு செய்தார்.
அதில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையெழுத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. எனவே இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
உடனே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு உங்களது கோரிக்கையை தெரிவித்து விட்டீர்களா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, தகவலை பகிர்ந்து கொண்டோம் என்று பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 30ஆம் தேதி (இன்று) முறையீடு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இரட்டை இலைக்கு உரிமை கோரி மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ள நிலையிலும் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. ஓபிஎஸ் தரப்போ பாஜக என்ன முடிவெடுக்க உள்ளது என்று எதிர்பார்த்துள்ளனர். பாஜக போட்டியிட்டால் ஆதரவளித்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்று கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் இன்றைய விசாரணை அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.