விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் 17 வயது சிறுவன் ஒருவன் மாயமானார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸாரின் விசாரணையில், மாயமான சிறுவன் கன்னியாகுமரியில் இருப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குச்சென்ற போலீஸார், சிறுவனை மீட்டு அவனோடு தங்கியிருந்த 33 வயதான பெண்ணையும் அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும்படி பல தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸாரிடம் பேசுகையில், “படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவன், ராஜபாளையம் தாலுகாவுக்குட்பட்ட தனியார் நிறுவனத்திற்கு அவ்வபோது வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 33 வயது பெண்ணுடன் சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் அந்தப்பெண் சிறுவனை காதலித்து வந்துள்ளார். சிறுவனும், அப்பெண்ணை காதலித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேறி தனியே வசிக்கும் பொருட்டு வெளியூருக்கு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து இருவேறு காவல்நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை நடத்தி அவர்கள் இருவரையும் மீட்டு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து, சிறுவனை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ததற்காக அப்பெண் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர்கள் விருப்பத்தின்பேரில், ஒப்புதல் கடிதம் எழுதிவாங்கிவிட்டு சிறுவன் அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்ட பெண், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்” எனக்கூறினர்.
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் பேசுகையில், “சிறுவன் பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் எனக்கூறும்போது, அவரை குழந்தைகள் நல கமிட்டி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தி முறையான உளவியல் வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து பெற்றோர்கள் விருப்பத்தின்பேரில் வீட்டுக்கு அனுப்பிவைப்பது, பாதிக்கப்பட்டவருக்கு எந்தவிதமான மனநிலையை உண்டாக்கிடும் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. மேலும் சிறுவனுக்கும், அந்தப்பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்ட இடத்தை கருத்தில் கொள்கையில் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத்தொழிலாளர் முறை இன்னமும் ஒழியவில்லையா? என்றே கேள்விகள் எழுப்பத் தோன்றுகிறது. ஆகவே, இந்த விவகாரத்தின் எழும் கேள்விகளை சிந்தித்து அதை தீர்ப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.