திருப்பூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்
திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோ பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – சுஜாதா தம்பதியர். இவர்கள் ரித்திகா (8) ரிதனிக் (6) ஆகிய இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார், இந்த நிலையில் சுஜாதா அருகிலுள்ள பனியன் பிரிண்டிங் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சுஜாதாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவருக்கும் மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக இருவரும் பிரிந்து வசித்து வந்துள்ளனர்.
இதுதொடர்பாக சமரசம் பேச மணிகண்டன் நேற்று சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி சுஜாதாவை குத்திக் கொலை செய்துள்ளார். அதை தடுக்க வந்த சுஜாதாவின் தாய் மாதவியையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவத்தால் சம்பவ இடத்திலேயே மனைவி சுஜாதா உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் காயங்களுடன் இருந்த மாதவியை மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்ததற்கான காரணத்தை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM