சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதனால் மழை பெய்யும் என எதிர்பார்த்த மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் படபடவென கொட்டித் தீர்த்தது.
சென்னையில் மழை
சென்னையில் முதலில் லேசான மழை பெய்த நிலையில் பின்னர் கனமழையாக மாறியது. அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து கொண்டிருக்கிறது.
பள்ளிகள் விடுமுறை
இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மழை விட்டு விட்டு பெய்து வருவது கவனிக்கத்தக்கது. எனவே சென்னை மாவட்ட ஆட்சியர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ரெயின்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில், சாரல் மழை அல்லது லேசான மழையை நகரின் பல பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் எதிர்பார்க்கலாம்.
போக்குவரத்து நெரிசல்
ஆனால் நீண்ட நேரத்திற்கு அல்லது
கனமழை
இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் மழை வந்துவிட்டாலே இரண்டு விஷயங்கள் தவறாமல் அரங்கேறிவிடும். ஒன்று போக்குவரத்து நெரிசல். வாரத்தின் முதல் நாளான இன்று பலரும் வெளியூரில் இருந்து சென்னை திரும்பி வருவர். பள்ளி, கல்லூரிகள், அலுவலகம், தினக்கூலி ஊழியர்கள் புறப்பட்டு செல்வதால் காலை நேரம் பரபரப்பாக காணப்படும்.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால் வழக்கமாக சாலைகளில் நெரிசல் இருக்கும். இதில் மழை பெய்தால் நெருக்கடி மேலும் அதிகரித்து விடும். ஜி.எஸ்.டி சாலை, அண்ணா சாலை, செங்கல்பட்டு, பெருங்களத்தூர், தாம்பரம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இன்றும் அப்படியான சூழலை பார்க்க முடிவதாக வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர்.
ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
இரண்டாவது ட்விட்டரில் #ChennaiRains என்ற ஹேஷ்டேக் வைரலாக மாறுவது. தங்கள் பகுதியில் எந்த அளவிற்கு மழை பெய்துள்ளது. இதமான காலைப் பொழுதா? இல்லை மழையால் தத்தளிக்கும் சூழலா? என ஏராளமான ட்வீட்களை போட்டு வைரலாக்கி வருகின்றனர். இதில் பல ட்வீட்கள் ரசிக்கும் படியாக இருப்பது கவனிக்கத்தக்கது.
மழை முன்னெச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும். இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.