விருதுநகர் மாவட்டத்தில் 17 வயது சிறுவனுடன் மாயமான 33 வயதுடைய பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மகாலட்சுமி (33) அப்பகுதியில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலைக்குச் சென்ற மகாலட்சுமி காணவில்லை என்று கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுவனும் காணாமல் போனது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விசாரணையில் செங்கல் சூலையில் வேலை செய்த போது மகாலட்சுமிக்கும், சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் கன்னியாகுமரியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் மகாலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.