வருமான வரி ஸ்லாப்: நாட்டின் நிதிநிலை அறிக்கை இன்னும் சில நாட்களில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வார். அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மோடி அரசாங்கத்தின், இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இதில், நடுத்தர வர்க்கத்திற்கும் பல துறைகளுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை நிதி அமைச்சகம் அமல்படுத்தும் என நம்பப்படுகின்றது.
பல அரசுத் துறைகள் மூலம் அனுப்பப்பட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், அவை பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்றும், இது நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினருக்கு பயனளிக்கும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரி
2014 ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது முதல் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 2.5 லட்சமாக நிர்ணயித்தார். அதன் பிறகு அரசாங்கத்தின் சார்பில் இந்த வரம்பு இன்னும் உயர்த்தப்படவில்லை. மேலும், 2019 ஆம் ஆண்டு முதல் நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் ரூ.50,000 ஆக உள்ளது. சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர், உயர்மட்ட பணவீக்கத்தை ஈடுகட்ட, விலக்கு வரம்பு மற்றும் நிலையான விலக்குகளை அதிகரிக்க வேண்டும் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பட்ஜெட் 2023
அதே சமயம், மத்தியதர வர்க்கத்தினருக்கு வாழ்க்கையில் இருக்கும் அழுத்தங்கள் பற்றி தனக்கு தெரியும் என சமீபத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். ‘நானும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள், ஆகையால், இந்த வகுப்பின் அழுத்தம் எனக்குப் புரிகிறது. நான் நடுத்தர வர்க்கத்தில் ஒருத்தியாக என்னைக் கருதுகிறேன், அதனால் எனக்குத் தெரியும்.’ என்று அவர் தெரிவித்திருந்தார். இதன் மூலம், வரும் பட்ஜெட்டில் தங்களுக்கு சில சலுகைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் நடுத்தர மக்களின் மனதில் ஏற்படுத்தியுள்ளார். நிதியமைச்சர், ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த பட்ஜெட் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
வரி அடுக்கு
பழைய வரி விதிப்பின்படி, 60 வயதுக்குட்பட்ட வரி செலுத்தும் தனி நபர்களுக்கு, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருந்தால், 5% வரி விதிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20% வரி விதிக்கப்படுகிறது. மறுபுறம், 10 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
சுகாதார காப்பீடு
சுகாதார காப்பீட்டு பிரீமியம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் மூலதன ஆதாய வரி விதிகளையும் அரசாங்கம் எளிதாக்கலாம். இது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்குப் பலன் தரும்.