அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான மோதலில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு மிகுந்த கவனம் ஈர்த்தது. ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். அதன்பிறகு ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கம், பொதுக்குழுவிற்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கு, தனித்தனியே நிர்வாகிகளை நியமித்தல் என அரசியல் களம் அனல் பறந்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
குறிப்பாக அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில்
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
என இருதரப்பின் வாதங்களும் நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு அதிமுகவில் நிலவிய சலசலப்பு சற்றே ஓய்ந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி மீண்டும் பரபரப்பாக்கியது.
இரட்டை இலை யாருக்கு?
ஏனெனில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவருமே தங்கள் தரப்பில் வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை எடப்பாடி தரப்பு நாடியது. அவர்கள் இன்றைய தினம் முறையிட அறிவுறுத்தியிருந்தனர்.
எடப்பாடி முறையீடு
இந்நிலையில் தனது கையெழுத்தை அங்கீகரிக்க வேண்டும். தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. இதனை உடனடியாக ஏற்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்தார். இதனால் அதிமுக பொதுக்குழு வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது.
இடைக்கால மனு
இந்த இடைக்கால மனு மீது பதில் தருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடைக்கால மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் எதிர்மனுதாரர்கள் மூன்று நாட்களில் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்று நாட்களில்
அதற்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. தயவு செய்து பதிலளிக்க கால தாமதம் செய்யாதீர்கள் என தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இதன்மூலம் இந்த வழக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வரும் வெள்ளிக்கிழமை அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தேர்தல் ஆணையம் பதில்
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகள் இன்னும் அமலில் இருப்பதாகவே கருதுகிறது. எனவே உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்கும் போது தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா? இல்லை ஒருங்கிணைப்பாளர் பதவி அங்கீகரித்து பதிலளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.