பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை: விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவணpபடத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் 2ஆம் பாகம் கடந்த 24ஆம் தேதி வெளியானது.

இதனிடையே, பிரதமர் மோடி தொடர்பாக யூ-டியூபில் வெளியான பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிபிசி ஆவணப்படம் நீக்கப்பட்டது ஒன்றிய அரசின் சட்டவிரோத நடவடிக்கை என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் விதி 16ன் கீழ் அமைச்சகம் அவசரகால தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெயரிடப்படாத ஆதாரங்களின்படி, யுடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் இந்தத் தடைக்கு இணங்கி, வீடியோ மற்றும் ட்வீட்களின் இணைப்புகளை நீக்கியுள்ளன.

இந்த நிலையில், பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய பாஜக அரசு விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம் தேதியன்று, அதாவது அடுத்த திங்கள் கிழமை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக, மத்திய அரசு விதித்த தடையை மீறி பிபிசி ஆவணப் படம் கேரளாவில் ஒளிபரப்பட்டது. அதேபோல், தமிழகத்திலும் இந்த தடையை மீறி பல்வேறு இடங்களில் படம் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.