ஈரோடு கிழக்கு – அதிமுக வேட்பாளர் அறிவிக்க தாமதம் ஏன்? செங்கோட்டையன் சொன்ன காரணம்!

அதிமுக
எடப்பாடி பழனிசாமி
அணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிக்காவிட்டாலும் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தொகுதியை வலம் வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கொங்கு மண்டலம் என்பது அண்ணா திமுகவின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடியார் தலைமையில் தேர்தல் பணியாற்றி வருகிறோம். பிற மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற வந்திருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும். எம்ஜிஆர் பொதுச்செயலாளராக இருந்த போது திண்டுக்கல் இடைத்தேர்தல் எவ்வாறு திருப்பு முனையாக அமைந்ததோ அதேபோல் இந்த தேர்தலும் திருப்பு முனையை ஏற்படுத்தும் தேர்தலாக இருக்கும். இங்கு எங்கள் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.

வழக்கு மன்றத்தை பொறுத்தவரை எங்கள் வழக்கறிஞர் குழு எடப்பாடியார் ஆலோசனையின் பேரில் சிறப்பாக இயங்கி வருகிறது. அரசியல் மன்றத்தை பொறுத்தவரை நாங்கள் தேர்தல் பணி ஆற்றி வருகிறோம். 98.5 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.

வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு விரைவில் அறிவிக்கப்படுவார் என்று பதிலளித்தார். ஏன் தாமதம் ஆகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே அதனால் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கலுக்கு 7ஆம் தேதி வரை நேரம் இருக்கிறது” என்றார்.

அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவளிக்குமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார்.

திமுக அமைச்சர்கள் கல் எறிவது, அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து செங்கோட்டையனிடம் கருத்து கேட்கப்பட்ட போது, “தேர்தல் சமயம் என்பதால் இப்போது அது குறித்து பேச முடியாது. நாங்கள் ஒரு கருத்து சொன்னால் அவர்கள் பதில் கருத்து சொல்வார்கள், அது நீண்டுகொண்டே செல்லும். தேர்தல் சமயமாக இல்லை என்றால் கருத்து சொல்லலாம். திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஊடகத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். எனவே மக்கள் நீதி வழங்குவார்கள்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.