சென்னை: சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்டிட ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீஸார் கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஜன.27ம் தேதி காலை அந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றது.
அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் கட்டிடத்தை இடிக்கும் பணிகளில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ‘ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகரன், ஜேசிபி இயந்திர ஓட்டுநர் பாலாஜி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்
இந்நிலையில் இன்று (ஜன.30) கட்டிட ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் கட்டிடத்தின் உரிமையாளர் சையது அலி பாத்திமா, பொறியாளர் ஷேக்பாய் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.