“ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல்” என்று அதானி குழுமம் நேற்று 413 பக்க அறிக்கையை வெளியிட்டது.
அதானியின் 413 பக்கங்கள் கொண்ட நீண்ட பதிலை மறுத்து “மோசடி என்பது மோசடிதான்” என்று குறிப்பிட்டுள்ளது ஹிண்டன்பர்க்.
இதுகுறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது, அதானி குழுமத்தால் இந்தியாவின் எதிர்காலம் பின் தங்கியுள்ளது. இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் பிரகாசமான எதிர்காலம் கொண்ட நாடு. நாட்டின் எதிர்காலம் அதானி குழுமத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதானி குழுமதின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் அதன் தலைவர் கௌதம் அதானியின் செல்வத்தை இந்தியாவின் வெற்றியுடன் இணைக்க முயற்சித்துள்ளது. இதை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. சுருக்கமாக, தெளிவாகச் சொல்வதானால், இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஒரு அற்புதமான எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு. அதானி குழுமத்தால் இந்தியாவின் எதிர்காலம் தடுத்து நிறுத்தப்படுகிறது. அதானி குழுமம் திட்டமிட்ட முறையில் தேசத்தை கொள்ளையடிக்கும் போது இந்தியக் கொடியில் தன்னைப் போர்த்தியிருக்கிறது. எங்களது குற்றச்சாட்டுக்கு, அதானி குழுமத்தின் பதில் தெளிவாக இல்லை. வெளிநாட்டு நிறுவனங்களுடனான பல சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை குறிப்பிட்டுள்ளோம், அந்த முக்கிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.