சென்னை: “மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்.
சின்னக் கலைவாணர் அரங்கம், திருவல்லிக்கேணி, சென்னை.நாள்: ஜனவரி 31, 2023 (நாளை) காலை 10.30 மணி. நாம் தமிழர் கட்சியினரும் பெருந்திரளாய்க் கலந்துகொள்ள இருக்கின்றனர். கடல் சூழலியல் குறித்த அக்கறையுள்ள அனைவரும் பங்குபெறலாம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்துத் துறை பங்களிப்பை போற்றும் வகையில் தமிழக அரசுசார்பில் அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இத்திட்டம் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, 2 ஆயிரத்து 263 சதுர மீட்டர் பரப்பில் பேனா நினைவுச் சின்ன பீடம், 2 ஆயிரத்து 73 சதுர மீட்டர் பரப்பில் நடைபால அமைப்பு, 1856 சதுரமீட்டர் பரப்பில் பின்னல் நடைபாலம், 1610 சதுர மீட்டர் பரப்பில் கடற்கரைக்கு மேல் பாதசாரிகள் பாதை,748 சதுர மீட்டர் பரப்பில் நினைவிடத்தில் இருந்து பாலம் வரையிலான நடைபாதை என மொத்தம் 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் பரப்பில் பேனா நினைவு சின்னம் அமைய உள்ளது. மேலும், கருணாநிதியின் பொன் மொழிகள் நினைவு சின்ன பீடத்தில் பதிக்கப்பட உள்ளன.
பீடத்தை சுற்றி உள்ள பகுதிகள் கோலம் வடிவில் அமைக்கப்படவுள்ளன. இப்பரப்பு முழுவதும் கடல் பரப்பினுள் அமைய இருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி பெற வேண்டியுள்ளது.இதற்கான அனுமதி கோரி பொதுப்பணித்துறை, மாவட்ட கடலோரமண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தது.
அதை பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னர் தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது அவசியம். அதன்படி தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வரும் நாளை (ஜன.31) சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.