பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்காக தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக களப்பணியாற்றி, வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் அவர்கள், இந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிடும் முனைப்பில் உள்ளனர். பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்பேன் என ஓபிஎஸ் கூறியிருக்கும் நிலையில், இரட்டை இலை சின்னத்துக்கு உரிமைகோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தாலும், வராவிட்டாலும் வேட்பாளரை களம் இறக்கும் முடிவில் இருக்கிறார் அவர். இதற்காக தேர்தல் பணிக்குழுவை அமைத்து பிரச்சார வேலைகளை தொடங்கியிருக்கிறது எடப்பாடி பழனிசாமி டீம்.
அங்கு தேமுதிக தனித்து களம் காண்கிறது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய அக்கட்சி, தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் பொருட்டு வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. இந்த சூழலில் தேமுதிகவின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாகவும், அதற்காக நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் எல்.கே.சுதீஷ். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கும் அவர், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கூறியுள்ளார். பிப்ரவரி 1 ஆம் தேதி ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் எல்.கே.சுதீஷ் அறிவித்துள்ளார்.