Salai Selvam Books: சாலை செல்வம் எழுதிய ‘தோழிகளின் தின்பண்டங்கள்’ என்னும் படைப்பு இயல் வாகையின் வெளியீடாக வந்துள்ளது. தோழிகளின் தின்பண்டங்கள் இன்னும் தலைப்பே நூலின் மையத்தை வெளிப்படுத்துகிறது
நூலின் அட்டைப்படத்தில் மூவர் உள்ளனர். இந்த நூலானது மூன்று தோழிகள் பற்றியது என்பதையும் தெரியப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊரைச் சுற்றி வருவதற்கும் தின்பங்களைத் தேடித் தின்பதற்கும் உருவான நட்பு பற்றிப் பேசுகிறது இந்நூல்.
இயற்கையோடு இயற்கையாகப் பிணைந்து வாழ்வதன் சுவையை உயிரோட்டமாகப் பதிவு செய்துள்ளார் சாலை செல்வம். தேவி, ஆராயி, அஞ்சலை ஆகிய மூவரும் மூன்றாம் வகுப்பு முதல் இணைபிரியாத் தோழிகள். இவர்களது முக்கியப் பணி சதா ஊர் சுற்றுதல். அதனூடே தின்பண்டங்களைத் தேடித் தேடி தின்னுதல்.
அதுவும் எப்படி என்றால் பறித்துத் தின்னுதல், பொறுக்கித் தின்னுதல், பங்கு போட்டு தின்னுதல், சுற்றி உட்கார்ந்து தின்னுதல், ஏறி உட்கார்ந்து தின்னுதல், திருடித் தின்னுதல் என்பதான போக்கில் உள்ளன. மூவரது நட்புக்குள் ராமு என்ற சிறுவன் தானும் எப்படியாவது இணைய வேண்டும் என்று நினைத்தான். அவனது முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
புதருக்குள் செல்வது, மரத்தில் ஏறுவது, பங்கு போடுவது எனத் தோழிகள் ஒவ்வொரும் ஒவ்வொரு திறனைப் பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்கான தின்பண்டம் எங்கு இருக்கின்றன என்று பார்த்தால் – மரம், செடி, கொடி, மண், கொட்டை, பூ, தண்ணீர் போன்றவற்றுள் உள்ளன.
இலைதழை, கொழுந்து, பிஞ்சு, பூ, காய், பழம், விதை இவையெல்லாம் இவர்களுக்கு நல்ல தின்பண்டங்களாகின்றன. இந்தத் தின்பண்டங்கள் சில ஊருக்குள் இருக்கும், சில காட்டுக்குள் இருக்கும், எதிர்பாராமல் எதிலாவது இருக்கின்றன.
தின்பண்டங்களைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். வீட்டில் சமைக்கும் சாப்பாடு எங்களுக்கானது அல்ல என்பதில் உறுதியாக உள்ளனர். தின்பண்டங்களுக்கான விலையையும் அளிப்பதில்லை. எல்லாம் இயற்கை அளிக்கும் கொடையாக உள்ளன.
வெயில், மழை, குளிர்காலப் பருவத்தில் கிடைக்கக்கூடிய தின்பண்டங்களை இவர்கள் சுவைக்கத் தவறவில்லை. பெண்களுக்கு எழும் சிக்கலால் தோழிகளாக இருந்த இவர்கள் பிரியும் சூழல் ஏற்படுகிறது. அந்தச் சூழலை மிகக் கடுமையாகவே அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
இயற்கையோடு இயற்கையாகத் தங்களைப் பிணைத்துக் கொண்டவர்களின் பதிவாக இந்நூல் கவனம் பெறுகிறது. இந்நூலானது இயற்கைக்கு மிக நெருக்கமாக்கிச் செல்வதோடு மட்டுமல்லாமல் நம்மை மீண்டும் இயற்கையை நோக்கித் திரும்ப வைக்கிறது.