IMF இற்குச் செல்லாமல் தற்போதிருக்கும் நிலையில் இருந்து மீள்வதற்கு அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் வரியை அதிகரிக்க வேண்டும். பண வீக்கம் அதிகரித்துள்ள வேளையில் அவ்வாறு செய்வதால் மக்கள் பாதிப்படைவார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வாறான நெருக்கடியான சந்தர்ப்பத்தில் சரியான மற்றும் ஒரேவழி IMF மாத்திரமே. இதைத்தவிர மாற்று வழியை கண்டுபிடிப்பது இலகுவல்ல. இதன் மூலம் எமக்கு நிதி உதவி மாத்திரம் அல்ல சர்வதேச நிதி நடவடிக்கைகளை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான உத்தரவாதமும் கிடைக்கும்.
அதனால் IMF க்கு சமமான வேறு மாற்று வழி இல்லை. ஆனால் IMF க்குச் செல்ல தாமதமானது என கூறப்படும் விடயம் மிகவும் தெளிவானது. இரண்டு வருடத்திற்கு முன்னர் IMF க்கு சென்றிருக்க வேண்டும். அன்று அமைச்சரவை அமைச்சர்கள் அது குறித்த விவாதத்தில் மாத்திரமே ஈடுபட்டு வந்தார்கள்.
IMF நிபந்தனைகளை விதிக்கவில்லை. வழிகாட்டல்கள் மாத்திரமே. அதுவும் எம்மை நிலையான தன்மைக்கு கொண்டு வருவதற்காகும்.
IMF பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன
இச்சந்தர்ப்பத்தில் IMF செல்லாமல் மீள்வதற்கு அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் வரியை அதிகரிக்க வேண்டும். பண வீக்கம் அதிகரித்துள்ள வேளையில் அவ்வாறு செய்வதால் மக்கள் பாதிப்படைவார்கள்.
ஆனால் இதிலிருந்து மீள்வதற்கு நாம் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.. தற்போது IMF பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. நாம் எதிர்பார்த்துள்ள இடத்திற்கு செல்ல முடியும்.
இதற்கு முன்னர் நாம் 16 தடவைகள் நிலையான பொருளாதார பின்னணியிலேயே உதவிகளை பெற்றோம்.
இம்முறை நாம் முகம் கொடுப்பது பொருளாதார வீழ்ச்சியில் இருந்தாகும். அதனாலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது.எவ்வாறாயினும் வெகுவிரைவில் பச்சைக்கொடி காட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.